கடந்த மாதம், கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தது. தொடர் தோல்வியால் நிலைகுலைந்த காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி பெரும் ஊக்கத்தை தந்தது. கடந்த ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, கர்நாடகாவில் பெற்ற வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ்:


இதையடுத்து, தங்களின் கவனத்தை வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் செலுத்த காங்கிரஸ் தயாராகி வருகிறது. இந்தாண்டின் இறுதியில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 


அதற்காக, தேர்தல் களத்தை தயார் செய்ய தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தியது.


இதையடுத்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக உள்ள பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி:


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், அவரை உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் சுருக்காமல் பல்வேறு மாநிலங்களின் அவரின் பிரச்சாரத்தை பயன்படுத்த மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க சென்றிருப்பதால், அவர் இந்தியா திரும்பியவுடன் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.


குறிப்பாக, உத்தர பிரதேச அரசியல் சூழலை பொறுத்து, அவருக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டால், அவரின் பொறுப்பாளர் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு, பிரியங்கா காந்திக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. 


மோதல் போக்கு:


பல்வேறு மாநிலங்களில், உட்கட்சி பூசலால் காங்கிரஸ் தவித்து வரும் நிலையில், கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.


ராஜஸ்தானில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முதலமைச்சருமான அசோக் கெலாட், கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்து காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக அமைந்தார்.


தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி தற்போது ஆட்சியில் உள்ளது. தேசிய அளவில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் கேசிஆர் அங்கு முதலமைச்சராக இருந்தாலும், அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.