உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு நடந்த இருவேறு விபத்துகளில் 31 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 50 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தள்ளுவண்டி, கட்டம்பூர் பகுதியில் உள்ள குளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் முதல் விபத்து ஏற்பட்டது. குறைந்தது 26 யாத்ரீகர்கள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள், இந்த விபத்தில் இறந்தனர். 20 க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக காயமடைந்தனர்.
உன்னாவோவில் உள்ள சந்திரிகா தேவி கோயிலில் இருந்து டிராக்டர் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அலட்சியம் காரணமாக சார்ஹ் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை விரைந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று இரவு நகரில் நடந்த இரண்டாவது சாலை விபத்தில், அஹிர்வான் மேம்பாலம் அருகே, அதிவேகமாக வந்த டிரக், டெம்போ மீது மோதியதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறுகையில், "இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு லாரியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
26 யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு வேதனை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் ராகேஷ் சச்சன் மற்றும் அஜித் பால் ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.
டிராக்டர் தள்ளுவண்டியை போக்குவரத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயப் பணிகளுக்கும், சரக்குகளை மாற்றுவதற்கும் டிராக்டர் தள்ளுவண்டியை பயன்படுத்தப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.