சுஸ்லான் எனர்ஜியின் நிறுவன தலைவரும் நிர்வாக இயக்குநருமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் புகழ்பெற்ற நிபுணருமான துளசி தந்தி, அக்டோபர் 1ஆம் தேதி மாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
இதுகுறித்து சுஸ்லான் எனர்ஜி வெளியிட்ட அறிக்கையில், " அக்டோபர் 1 (நேற்று) அன்று சுஸ்லான் எனர்ஜி லிமிடெட்டின் நிறுவனர் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் முதலீட்டாளர்களில் ஒருவரான துளசி ஆர். தந்தியின் அகால மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாரடைப்பால் பாதிக்கப்பட்ட துளசி அதே நாளில் காலமானார்.
இந்த இக்கட்டான நேரத்தில், தந்தியின் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், நிறுவனத்திற்கான அவரது பார்வையை நனவாக்கவும், திறன் மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட அதன் மிகவும் அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் குழு மற்றும் மூத்த நிர்வாகம் நிறுவனத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
64 வயதான துள்சி, இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு நிதி என்ற மகளும், பிரணவ் என்ற மகனும் உள்ளனர்.
1995இல் சுஸ்லான் எனர்ஜியை நிறுவியதன் மூலம் இந்தியாவில் காற்றாலை புரட்சியில் தந்தி முக்கிய பங்காற்றினார். உலகளாவிய காற்றாலை ஆற்றல் சந்தையில் சர்வதேச நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி, விலையுயர்ந்த சிக்கலான தொழில்நுட்பங்கள் பாரம்பரிய வணிகங்களுக்கு ஏதுவாக இல்லாத சமயத்தில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வாய்ப்பு இருப்பதை முன்கூட்டியே கணித்தவர் தந்தி.
சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் தலைமை நிர்வாக அலுவலர் அஸ்வனி குமார், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இதுவரை நான் அனுப்பியதில் இதயத்தை உடைக்கும் தகவல் இது.
காற்றாலையின் முன்னோடியாகவும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போர்வீரராகவும் துள்சிபாயை உலகம் நினைவில் கொள்ளும் அதே வேளையில், நமது வருங்கால சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்கும் சாம்பியனாக அவரை நாங்கள் நன்கு அறிவோம். எதிர்த்துப் போராடுவதற்கான விருப்பம் மற்றும் நமது மோசமான காலங்களில் நிமிர்ந்து நிற்கும் வலிமை ஆகியவற்றை அவர் கற்று கொடுத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.