உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில மணிநேரத்தில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட இருக்கிறார்கள். செங்குத்து துளையிடுதல், பக்கவாட்டு துளையிடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மீட்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 17 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்து வருகிறது.
இந்த விபத்து காரணம் என்ன என்று கேட்டபோது, பாபா பௌக்நாக் என்ற தெய்வம் கோபமாக இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் மக்கள் கூறினர்.
விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு, சுரங்கப்பாதையின் முகப்பில் பாபா பௌக்நாக் கோயில் கட்டப்பட்டது. மீட்புப் பணியைத் தொடங்குவதற்கு முன், நிபுணர்கள் மற்றும் குழுக்கள் பாபா பௌக்நாக் கோயிலுக்கு சென்று பூஜை செய்து மீட்கும் பணியை தொடங்கினர். தற்போது மீட்பு பணி வெற்றி பாதையை நெருங்கியுள்ளது. சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிக்கும் பணி முடிந்து, அதன் மூலம் தொழிலாளர்கள் வெளியே அழைத்து வரப்பட இருக்கிறார்கள். உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் பாபா பௌக்நாக் தற்காலிக கோயிலில் வழிபட்டார். அதே நேரத்தில், வெளிநாட்டு நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் பாபா பௌக்நாக் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்..?
உத்தரகாசியில் 41 தொழிலாளர்கள் சிக்கியபோது சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி விண்வெளி சங்கத்தின் தலைவர் அர்னால்ட் டிக்ஸ் அழைக்கப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். பொறியியல், புவியியல், சட்டம் மற்றும் இடர் மேலாண்மை விஷயங்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர். 2022 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தேசிய தீ பாதுகாப்பு சங்கத்தால் கமிட்டி சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொடக்கநாள் முதலே அர்னால்ட் டிக்ஸ் இருந்து வருகிறார். டிக்ஸ் மேற்பார்வையில் முதல் மீட்புப் பணி தொடங்கிய நாளில் இருந்து அவர் இந்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்.
மொத்தம் ஐந்து ஏஜென்சிகள் - ONGC, SJVNL, RVNL, NHIDCL மற்றும் THDCL யுடன் இணைந்து உத்தரகாசியில் மீட்புப் பணிகளுக்கு தலைமை தாங்கி வருகிறார். டிக்ஸ் ஒரு சுரங்கப்பாதை நிபுணர். உலகின் எந்தப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அவர் தனது குழுவுடன் சென்றடைந்து மீட்டு வருகிறார். சுரங்கப்பாதையில் சரிவு அல்லது தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்றும், அந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் எப்படி பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் அறிவுறித்தி வருகிறார்.
அர்னால்ட் டிக்ஸ் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞர். அவர் பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்வெஸ்டிகேட்டர்ஸ் உறுப்பினர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி எப்போதாவது டோக்கியோ நகர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் சுரங்கப்பாதை மீட்பு பணி குறித்து பாடமும் நடத்தி வருகிறார். இம்முறை உத்தரகாண்டிலும் இவரது தலைமையில் களம் இறங்கி மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, அதை வெற்றிப்பாதைக்கும் அழைத்து சென்றுள்ளார்.