திங்கள்கிழமை இரவு அதாவது நவம்பர் 27ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூரில் இருந்து ராஜஸ்தானின் பிரதாப்கருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  33 பயணிகள் காயமடைந்துள்ளனர் 


காயமடைந்த அனைவரும் ஒரு டிரக்கிலும் பின்னர் ஆம்புலன்ஸிலும் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில்  மூன்று பயணிகள் உயிருக்கு  ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, ’ஜாகர் டிராவல்ஸுக்கு சொந்தமான பேருந்து, மண்ட்சூரில் இருந்து பிரதாப்கர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பேருந்து ஹதுனியா கிராமத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தை அடுத்து பேருந்திற்குள் இருந்த பயணிகள் அலறியுள்ளனர். பயணிகளின் அலறியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர்’ என கூறப்பட்டுள்ளது. 


பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஹதுனியா காவல்நிலையத்தில் இருந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் மீனா மற்றும் நிர்வாக அதிகாரிகளும் மாவட்ட மருத்துவமனைக்கு வந்து விபத்துக்குள்ளான மக்களிடம் நலன் விசாரித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏஎஸ்பி மீனா, தற்போது, ​​காயமடைந்தவர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார்.