உத்தரகாண்ட் மாநிலத்தில் நடுரோட்டில் சென்ற பெண்களை காரில் வந்த சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்: பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்தாண்டு, கொல்கத்தா சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், உத்தரகாண்ட் ஹல்த்வானி நகரில் சேக்ரட் ஹார்ட் பள்ளி அருகே இரண்டு பெண்களை சில ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.


கொல்கத்தா சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே உத்தரகாண்ட் சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. சாலையில் இரண்டு பெண்கள் காரை ஓட்டி செல்கின்றனர்.


வைரலாகும் வீடியோ: அதற்கு பின்னே, கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் வேகமாக பின்தொடர்கிறது. திடீரென, இரண்டாவது கார் (Hyundau Nios i20), வலது புறத்திலிருந்து வருகிறது. அந்த காரின் முன்பக்கம், இரண்டு ஆண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள், ஜன்னல் வெளியே கால் போட்டபடி ஆபத்தாக பயணிக்கிறார்கள். அதோடு, அந்த இருவரும் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.


 






தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண், "நேற்றிரவு, திரைப்படம் பார்த்துவிட்டு என் பெண் தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். திடீரென்று 10 ஆண்கள் நிறைந்த இரண்டு கார்கள் எங்கள் தடுக்க முற்பட்டன.


கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று (தற்காலிக பதிவு எண்: T0724UK4618C) எங்களுக்கு முன்னால் முந்தி சென்றது. அவர்கள் கதவுகளைத் திறந்து எங்களைக் கடந்து செல்லவிடாமல் தடுக்க முயன்றனர். வெள்ளை நிற Nios i20 கார் (UK-04-AK-1928) எங்களைத் தடுப்பதற்குப் பின்னால் இருந்தது.


அதனால் எங்களால் தப்பிக்க முடியவில்லை. முதல் முறை நடந்தபோது நாங்கள் தப்பித்தோம். இரண்டாவது முறை காரின் கதவுகளைத் திறந்து எங்களை முற்றிலுமாக பிளாக் செய்துவிட்டனர். ​​அதிர்ஷ்டவசமாக ஸ்கூட்டரில் வந்த ஒருவர் வந்தார். அவர் அவர்களைக் கடந்து செல்ல முயன்றார். அது எங்களுக்குத் தப்பிக்க ஏதுவாக அமைந்தது. நாங்கள் எப்படியோ அங்கிருந்து சென்றுவிட்டோம்.


ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதையே செய்ய முயன்றனர். ஊரில் அமைதியும் பாதுகாப்பும் இப்படித்தான் பேணப்படுகிறதா? ஏன் ஊரில் போக்கிரித்தனம் அதிகரித்து வருகிறது" என பதிவிட்டுள்ளார்.