உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி அமைந்துள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 


சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள்: 


அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். கடந்த 7 நாட்களுக்கு மேலாக அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், வெளியேற முடியாமல் இன்று 8 நாளாக  தவித்து வருகின்றனர். 


சிக்கிக் கொண்ட 40 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகண்ட்,  இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. சுரங்கத்தில் மண் சரிந்துள்ள பகுதி சுமார் 30 மீட்டர் நீளம் கொண்டதாக தெரிகிறது. 


எனவே, அந்த பகுதியில் துளையிட்டு தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-தீபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.


"அடுத்த இரண்டு நாட்களில் மீட்புக் குழு சென்றடையும்"


இந்த நிலையில், மீட்பு பணியை ஆய்வு செய்வதற்காக உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரகாசிக்கு சென்றுள்ளார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொழிலாளர்களை உயிருடன் வைத்திருப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இடிபாடுகளை துளையிடும் இயந்திரம் சரியாக வேலை செய்தால் தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு அடுத்த இரண்டு நாட்களில் மீட்புக் குழு சென்றடையும். 


பிரத்யேக இயந்திரங்களைக் கொண்டு வர BRO (எல்லைச் சாலைகள் அமைப்பு) மூலம் சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு பல இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது இரண்டு இயந்திரங்களை இயக்கி வருகிறோம்" என்றார்.


இதை தொடர்ந்து பேசிய உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, "ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதே நமது முதல் முன்னுரிமை. இதற்காக அனைத்து படைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. நாளுக்கு நாள் அவர்களுக்கான சிக்கல்கள் அதிகரித்து வருவதால், அவர்கள் விரைவில் மீட்கப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.