ஹரியானாவின் முதலமைச்சராக நயப் சிங் சைனி, வரும் 17ஆம் தேதி பதவியேற்பார் என பாஜக அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜகவின் மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அனைத்து விதமான கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கும் விதமாக ஹரியானாவில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது.
ஹரியானாவில் பதவியேற்பு விழா:
மக்களவை தேர்தலை தொடர்ந்து நடைபெறும் முதல் மாநில தேர்தல் என்பதால் ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் ஹரியானா மீது இருந்தது. ஹரியானாவில் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, கட்சியின் வாய்ப்புகளை அச்சுறுத்தும் வகையில் தோன்றிய சாதி அரசியலை கடந்து பாஜக இந்த வெற்றியை வசப்படுத்தியது.
தேர்தலுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பாக, முதலமைச்சர் பதவி வகித்து வந்த மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக நயாப் சிங் சைனியை புதிய முதலமைச்சராக கட்சி தலைமை நியமித்தது. 2019 தேர்தலில் கட்டார் தலைமையில் பாஜக போட்டியிட்டது.
ஆனால், கட்சி பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜேஜேபி) ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 2024 தேர்தலில் பெரும்பான்மையை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பாஜக மாநில தலைமையை மாற்றியது.
புதிய முதலமைச்சரா?
கட்சியின் புதிய முகமாக சைனியை நியமித்தது. அதன் விளைவாக தற்போது பாஜக, ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஹரியானாவில் வரும் 17ஆம் தேதி, முதலமைச்சரின் பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.
தற்போதைய முதலமைச்சர் நயப் சிங் சைனியே மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜகவின் மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவை தொடர்ந்து முதலமைச்சர் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பாஜகவின் வெற்றியில் நயப் சிங் சைனி மிகப்பெரிய பங்காற்றியுள்ளதாகவும் எனவே அவருக்கே மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டது.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து அமைச்சரவை அமைப்பது பாஜகவுக்கு மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அனைத்து பிராந்தியங்களுக்கும் சாதிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அமைச்சரவை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.