உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் உள்ள பல்வேறு கோயில்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. விரிசல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சரிந்து வருகிறது. இம்மாதிரியாக நடப்பதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழம்பி வரும் நிலையில், மாநில அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


தானாக புதைந்த நகரம்:


அந்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரகண்ட் முதலமைச்சர் பூஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். அந்த நகரம் தானாகவே புதைவதற்கு காரணம் என்ன என்பதை ஆராய மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.


இருப்பினும், ஒரு நகரம் எப்படி தானாக புதையும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. மனிதர்களால் நிகழ்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள், இயற்கை போன்றவையே காரணம் என வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான் தெரிவித்துள்ளார்.


என்ன காரணம்..?


மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வாடியா இன்ஸ்டிடியூட் ஒரு ஆய்வு நிறுவனமாகும். ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணத்தை விளக்கி பேசிய கலாசந்த், "ஜோஷிமத் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன.


நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவின் இடிபாடுகளின் மீது உருவாக்கப்பட்டது ஒரு காரணம்.


பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். காலநிலை மாற்றம், காலபோக்கில் நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் கற்களின் பலம் குறைந்தது மூன்றாவது காரணம்.


நிலச்சரிவு இடிபாடுகளின் மேல் ஜோஷிமத் அமைந்திருப்பது பற்றி அட்கின்ஸ் முதன்முதலில் 1886இல் ஹிமாலயன் அரசிதழில் எழுதினார். பழைய புதைவு மண்டலத்தில் ஜோஷிமத் அமைந்திருப்பது பற்றி 1976ஆம் ஆண்டி மிஸ்ரா கமிட்டியில் குறிப்பிடப்பட்டது.


கடந்த ஆண்டு ரிஷிகங்கா மற்றும் தௌலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இமயமலை ஆறுகள் கீழிறங்கி வருகிறது. இதுவும், அதிக மழைப்பொழிவு ஆகியவையும் நிலைமையை மோசமாக்கியிருக்கலாம்.


கட்டுமான பணிகள் அழுத்தம்:


ஜோஷிமத் பத்ரிநாத்தின் நுழைவாயிலாக இருப்பதால், ஹேம்குந்த் சாஹிப், பனிச்சறுக்கு தலமான அவுலியில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகளால் ஏற்படும் அழுத்தம் குறித்து யாரும் யோசிக்கவில்லை. இதனால், வீடுகளில் விரிடல் ஏற்பட்டிருக்கலாம்.


எல்லா இடங்களிலும் விடுதிகளும், உணவகங்களும் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையால் ஏற்பட்ட அழுத்தம் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரத்தில் உள்ள பல வீடுகள் தப்பிக்க வாய்ப்பில்லை, உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதால் அங்கு வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்" என்றார்.