திருமணமாகியிருந்தாலும் சுய விருப்பத்தின் பேரில் யாருடனும் பெண் சேர்ந்து வாழலாம் என, உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


மனுதாரர் குடும்ப விவரம்:


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவர் சார்பில், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில் தனக்கு கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து எனக்கும் எனது மகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு 10 வயது, மகளுக்கு ஆறு வயது ஆகிறது.


வீட்டை விட்டு வெளியேறிய மனைவி:


இந்நிலையில், ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளங்கள் வழியே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையிலான பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறியது. பின்னர் அந்த பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி,  தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்வதாக கூறி கணவரின் வீட்டை விட்டு வெளியேறினார்.  அதைதொடர்ந்து கணவரின் வீட்டிற்கு திரும்பாத அந்த பெண், பரிதாபத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்யாமலேயே  சேர்ந்து வாழ்ந்து வந்தார்.


ஆட்கொண்டர்வு மனு:


இதுதொடர்பான விவரங்களை அறிந்த ஜிம் பயிற்சியாளர் உத்தராகண்ட் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில், தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதாகவும், தனது மனைவி சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.


வழக்கு விசாரணை:


வழக்கை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் புரோகித் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனைவியை மே 4 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது, “பரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவருடன் தான் முழு விருப்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், தனது கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் இனி அவருடன் வாழ விரும்பவில்லை எனவும் மனுதாரரின் மனைவி கூறினார்.


நீதிபதிகள் உத்தரவு:


இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நிதிபதிகள்,  ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதில், குறிப்பிட்ட அந்த பெண் தனது விருப்பத்தின் பேரிலேயே வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். தற்போது அந்தப் பெண் எப்படி வாழ்ந்து வருகிறாரோ அப்படியே வாழலாம். மனுதாரரான கணவருக்கு சாதகமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.  அந்த தீர்ப்பை கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மனுதாரரின் வழக்கறிஞர் அருண்குமார் அதிருப்தி தெரிவித்ததோடு,  இதுபோன்ற தீர்ப்பு திருமண முறைக்கு ஆபத்தாக மாறும். எனவே, தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என கூறினார்.