மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், உத்தரகாண்டில் கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி மதரஸாவையும் அதன் அருகே அமைந்திருந்த மசூதியையும் மாவட்டம் நிர்வாகம் இடித்திருக்கிறது. இதுவே, பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. 


இதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர் வன்முறை சம்பவங்களால் ஹல்த்வானி நகரமே ஸ்தம்பித்துள்ளது. கலவரம் செய்பவர்களை கண்ட உடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


கலவரத்திற்கு காரணம் என்ன? 


ஹல்த்வானி பன்பூல்புரா பகுதியில் அரசு நிலத்தில் மதரஸாவையும் மசூதியையும் சட்ட விரோதமாக கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, இரண்டையும் இடிக்க பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், மதரஸாவையும் மசூதியையும் இடிக்க உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இது, மோதலாக மாற, அதில் சிக்கி 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். அரசு அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என பலர், இந்த வன்முறையில் சிக்கினர். அதிகாரிகள் மீது சில விஷமிகள் கல்வீச்சு நடத்தியதாகவும் அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டு வீசியதாகவும் கூறப்படுகிறது. காவல்நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் நிலைமை மேலும் மோசமானது. இதனால், பன்பூல்புரா பகுதியில் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.


உத்தரகாண்டில் தொடர் பதற்றம்:


நிலைமையை ஆய்வு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, உத்தரகாண்ட் காவல்துறை தலைவர் அபினவ் குமார் மற்றும் ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஏ.பி.அன்சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதை தொடர்ந்து பேசிய புஷ்கர் சிங் தாமி, "ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் ஒரு குழு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றது. அப்போது, ​​சமூக விரோதிகள் சிலர், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில், சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்தனர். 


கூடுதல் போலீஸ் மற்றும் மத்தியப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கலவரக்காரர்கள், பொது சொத்துகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


 






தொடர்ந்து பேசிய உத்தரகாண்ட் டி.ஜி.பி. அபினவ் குமார், "நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.