உத்தரகாண்ட் மாநிலம் பன்புல்புராவில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், நைனிடால் மாவட்டம் ஹல்த்வானி நகரில் மதக்கலவரம் வெடித்துள்ளது. அரசு நிலத்தில் மதரஸாவை சட்டவிரோதமாக கட்டியதாகக் கூறி மாவட்டம் நிர்வாகம் இடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதரஸா இடிக்கப்பட்டதால் வெடித்த கலவரம்:
அதுமட்டும் இன்றி, தரைதளத்தில் இருந்த மசூதி போன்ற கட்டுமானமும் இடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக பன்புல்புரா பகுதியில் நைனிடால் மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதரஸாவை இடித்த காரணத்தால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், நிலைமை மேலும் மோசமானது. பதற்றமான சூழலுக்கு மத்தியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதில் சிக்கி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காயமடைந்தனர்.
உத்தரகாண்டில் தொடர் பதற்றம்:
நிலைமையை ஆய்வு செய்ய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, உத்தரகாண்ட் காவல்துறை தலைவர் அபினவ் குமார் மற்றும் ஏடிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஏ.பி.அன்சுமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேசிய புஷ்கர் சிங் தாமி, "ஹல்த்வானியின் பன்பூல்புரா பகுதியில், நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் ஒரு குழு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றது. அப்போது, சமூக விரோதிகள் சிலர், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில், சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
கூடுதல் போலீஸ் மற்றும் மத்தியப் படைகள் அங்கு அனுப்பப்படுகின்றன. அனைவரும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கலவரக்காரர்கள், பொது சொத்துகளுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய உத்தரகாண்ட் டி.ஜி.பி. அபினவ் குமார், "நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. நிலைமை பதற்றமாக உள்ளது. ஆனால் கட்டுக்குள் உள்ளது. வரும் நாட்களில் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.