காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. 


அதிகரிக்கும் மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்கள்:


வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்த நிலையில், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை சம்பவ இடத்திற்கு சென்றது.


சிறுத்தையை பிடிக்க சென்ற வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக, வனத்துறை அதிகாரிகள் மீது சிறுத்தை பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






வைரலாகும் வீடியோ:


அதில், சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பதும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருக்கும் மக்கள், சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பார்க்கின்றனர்.


ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பாய்ந்து வரும் சிறுத்தை, வனத்துறை அதிகாரிகளை கடிக்க முயற்சிக்கிறது. கையில் துப்பாக்கி வைத்திருந்தும் சிறுத்தையை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நாலா புறமும் அலறியடித்து ஓடுகின்றனர். 


சமீபத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புலி நுழைந்து, மக்களை அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலிபிட் மாவட்டத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து காளிநகரில் உள்ள அட்கோனா கிராமத்திற்குள் புலி நுழைந்தது. 


இதையும் படிக்க: Morning Headlines: மக்களவையில் பிரதமர் மோடி உரை! அமித்ஷா திட்டவட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!