அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில் சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறும். 


இன்று தாக்கலான உத்தரகாண்ட் பொதுசிவில் சட்ட மசோதாவில் திருமணம், விவாகரத்து, சொத்து, வாரிசு சட்டங்கள் தொடர்பாக இருந்தது. இதில், உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து இருக்கும் சட்டங்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


லிவ்-இன் உறவுகளை பதிவு செய்ய வேண்டும்:


இந்த புதிய சட்டப்படி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். லிவ் இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிப்பவர்களா? இல்லையா? என்பது குறித்த அறிக்கையை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். லிவ்-இன் உறவுக்கு வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், மூன்று மாதங்கள் சிறை தண்டனையோடு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். 


லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் பதிவு செய்யும்போது தவறான  தகவல்களை வழங்கினால்  மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களின் அறிக்கைகள் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.


அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் தவறாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரகண்ட் பொது சிவில் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.


பராமரிப்புத் தொகையைப் பெறலாம்:


மேலும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகிய பெண் நீதிமன்றத்தை அணுகி, பராமரிப்புத் தொகையைப் பெறவதற்கு கோரிக்கை வைக்கலாம். யுசிசி விதிகளின்படி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பிறக்கும் குழந்தை,  சம்பந்தப்பட்ட தம்பதியரின் முறையான குழந்தையாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் பதிவு செய்ய சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது,  லிவ் இன் உறவில் இருப்பவர்கள் தடை செய்யப்பட்ட உறவில் இருக்கக் கூடாது.  தடை செய்யப்பட்ட உறவுகள் என்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்காத சில குடும்ப உறவுகளை குறிக்கிறது (ரத்த உறவுகள், சொந்தங்கள்).


அதன்படி, லிவ்-இன் உறவில் இருப்பவர்களில் ஒருவர் திருமணமானவர், ஏற்கனவே ஒரு ரிவ்-இன் உறவில் இருப்பவர்கள் என்றால் பதிவு செய்ய முடியாது. மேலும் லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் ஒருவர் 21 வயதுக்கு குறைவாக இருந்தாலும் பதிவு செய்ய முடியாது.


லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களில் ஒருவரின் சம்மதம் இல்லாமல் இருந்தாலும் பதிவு செய்ய முடியாது.  லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பை முறித்து கொள்ள விரும்பினால்,  பதிவாளரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நகலை பார்ட்னரிடம் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.