இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைந்தது.
ராகுல் காந்தி யாத்திரையில் தொடரும் சர்ச்சை:
இரண்டாவது யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியதில் இருந்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் யாத்திரையின்போது கோயிலுக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விதிகளை மீறி செயல்பட்டதாக மக்களை தூண்டியதாகவும் அவர் அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
பின்னர், அஸ்ஸாம் மாநிலத்திலும் மேற்குவங்கத்திலும் அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என தொடர் சர்ச்சை வெடித்து வருகிறது.
இந்த நிலையில், யாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி நாய் பிஸ்கட் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. வைரலாகி வரும் வீடியோவில் நாய் ஒன்றுக்கு ராகுல் காந்தி பிஸ்கட் கொடுப்பது பதிவாகியுள்ளது. யாத்திரையின்போது, நாய்க்குட்டியுடன் ஒருவர் வந்துள்ளார்.
அப்போது, நாய்க்குட்டியை பார்த்த ராகுல் காந்தி, அதனுடன் பிரியமாக விளையாடியுள்ளார். அதற்கு பிஸ்கட் கொடுத்துள்ளார். ஆனால், ராகுல் காந்தி கொடுத்த பிஸ்கட்டை நாய் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து, நாயின் உரிமையாளரிடம் நாய் பிஸ்கட்டை கொடுத்துள்ளார்.
தொண்டருக்கு நாய் பிஸ்கட் கொடுத்தது உண்மையா?
இதை கடுமையாக விமர்சித்த பாஜக, தனது ஆதரவாளர் ஒருவருக்கு ராகுல் காந்தி நாய் பிஸ்கட் கொடுப்பதாக சர்ச்சையை கிளப்பியது.
ராகுல் காந்தி, தனது ஆதரவாளர்களை தவறாக நடத்துவதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சிக்க தொடங்கினர். ராகுல் காந்தியின் நாய் சாப்பிடும் தட்டில் தனக்கு பிஸ்கட் கொடுக்க முயற்சித்ததாகவும் ஆனால், அதை ஏற்காமல் காங்கிரஸில் இருந்து விலகியதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா குறிப்பிடுகையில், "அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தியால் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமைமிக்க ஆசாமி. இந்தியன். நான் சாப்பிட மறுத்து காங்கிரஸில் இருந்து விலகினேன்" என்றார்.
ஆதரவாளருக்கு நாய் பிஸ்கட் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். "நாயும் உரிமையாளரும் என்னிடம் வந்தனர். நாய் நடுங்கியது, பயந்தது. அதனால் நாய்க்கு பிஸ்கட் கொடுத்தேன். ஆனால், நாய் பயந்து போனது. பிறகு, நாயின் உரிமையாளரிடம் பிஸ்கட்டை கொடுத்தேன். வந்தவர் காங்கிரஸ்காரர் அல்ல. நாய்கள் மீது இவர்களுக்கு (பாஜக) என்ன வெறி இருக்கிறது என்று தெரியவில்லை" என்றார்.