உத்தரகண்டின் சார் தாம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் வெளியேறும் பாதை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கினர். 


ஆனால், மீட்புக் குழுவினர் ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சுரங்கத்தில் துளையிடும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு மீட்பு பணியில் தடை நீடித்தது. அதேபோல் துளையிடும் போது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 


சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு:


இந்த நிலையில், தொடர் முயற்சியின் பலனாக 17ஆவது நாளான இன்று சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கி வெளியே வந்த தொழிலாளர்களிடம் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நலம் விசாரித்தார்.


நலம் விசாரித்தது மட்டும் அவர்களை கட்டியணைத்து வரவேற்றார். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 


மாவட்ட மருத்துவமனையில் 30 படுக்கை வசதி தயாராக உள்ளது. மேலும் 10 படுக்கை வசதியும் தயார் நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் உடல்நலம் குறித்து ஆய்வு செய்ய ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. 400 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்பு பணி இன்றுடன் நிறைவடைந்துள்ளது. அனைத்து விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


நலம் விசாரித்த உத்தரகண்ட் முதலமைச்சர்:


மீட்பு பணிகள் அனைத்தையும் முதலமைச்சரே ஆய்வு செய்து வருகிறார். தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். தற்போது, அந்த பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது.