தெலங்கானாவை கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். வரும் நவம்பர் 30ஆம் தேதி, அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற கே.சி.ஆர் முனைப்பு காட்டி வருகிறார்.


ஆனால், கே.சி.ஆரை தோற்கடித்து தெலங்கானாவில் முதல்முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, தெலங்கானாவில் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது.


தெலங்கானா அரசியலில் திருப்பம் ஏற்படுமா?


ஆனால், தெலங்கானா காங்கிரஸ் தலைவராக ரேவந்த் ரெட்டி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் பலன் தந்தது என்றே சொல்லலாம். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கினர்.


தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோரை குறிவைத்து தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.


இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அளித்துள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.


இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலங்கானா மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசியுள்ள அவர், "தெலங்கானாவின் சகோதரிகள், சகோதரர்கள், மகன்கள் மற்றும் மகள்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள்:


மக்களுக்கு வாக்கு கொடுத்தப்படி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கினேன். தெலங்கானா மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவராக இருப்பேன். சோனியா அம்மா என்று அழைப்பதன் மூலம் நீங்கள் எனக்கு மிகுந்த மரியாதை அளித்துள்ளீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றார்.


வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கருத்துக்கணிப்புகளில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. தொடங்கு சட்டமன்றமே அமையும் என கூறப்பட்டுள்ளது. 


மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. சில தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் சில தொகுதிகளில் பாஜகவும் மும்முனை போட்டியை ஏற்படுத்துகிறது.