உத்தராகண்ட்டில் சமீபத்தில் பல முறை மேகவெடிப்பு ஏற்பட்டு, அம்மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் டேராடூனில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், பாலம், சாலைகள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலையில், இன்று சமோலி மாவட்டத்தில் மேகவெடிப்பால்  ஏற்பட்ட கடுமையான மழைப் பொழிவின் காரணமாக வெள்ளம் எற்பட்டு, 14 பேர் மாயமாகியுள்ளனர்.

Continues below advertisement

மூழ்கிய கோவில் - 14 பேர் மாயம் - 20 பேர் காயம்

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையாக மழை பொழிந்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 14 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டு,  4 கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்கள், சமோலி மாவட்ட தலைமையகமான கோபேஷ்வரில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நந்தநகர் பகுதியில் உள்ளன. இந்த பேரழிவால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

அந்த கிராமங்களில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் தகவலின்படி, நந்தநகர், சரபானி மற்றும் துர்மா கிராமங்களில் சில குடும்பங்கள் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதேபோல், நந்தபிரயாக் நகர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில்  ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 5 பேர் மாயமான நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் செயல்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் வீடுகளில் விரிசல் எற்பட்டுள்ளது. பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதடைந்துள்ளதால், பல இடங்கள் துண்டிக்கப்பட்டு தீவுபோல் காட்சியளிக்கின்றன.

உத்தராகண்ட்டில் புகழ்பெற்ற தப்கேஷ்வர் கோவிலை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றுள்ளது. அந்த கோவிலின் நுழைவாயிலில் உள்ள அனுமன் சிலை தண்ணீரில் மூழ்கியதால் வெளியே தெரியவில்லை.

தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தராகண்ட்டிற்கு சுற்றுலா வந்த 2,500-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

20-ம் தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை - சிகப்பு நிற எச்சரிக்கை

உத்தராகண்ட்டில் தொடர்ந்து மேகவெடிப்பு ஏற்பட்டு, அதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளிலிருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தில், வரும் 20-ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சிகப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.