உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் SDRF வீரர்கள் விரைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தையடுத்து அதிகாரிகள் மீது அப்பகுதி மக்கள் கோபமுற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

நடந்தது என்ன:

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்ற பேருந்தில்  50 முதல் 55 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.  அப்போது சிமண்டி கிராமம் அருகே  பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது, சாலையை விட்டு விலகிச் சென்று, 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) இரவு 8 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் உயிரிழந்துள்ளனர் என்றும் மீதமுள்ளவர்கள் பலத்த காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

விசாரணை:

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த, உள்ளூர் காவல் துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் (SDRF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உள்ளூர் எம்எல்ஏ ரிது கந்தூரியும் சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை பார்வையிட்டார். திருமண விழாவிற்கு சென்ற பேருந்தில் , சுமார் 30 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் , இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.