உத்தர பிரதேசத்தில் யூடியூபர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 24 லட்சம் ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. யூடியூபரின் பெயர் தஸ்லீம் என்பது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, கிட்டத்தட்ட  1 கோடி ரூபாயை இவர் சம்பாதித்திருக்கிறார்.


1 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிய யூடியூபர்:


யூடியூபர் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதை அவரின் குடும்பத்தார் மறுத்துள்ளனர். இதுகுறித்து வரிவாக பேசிய தஸ்லீமின் சகோதரர் ஃபெரோஸ், "உ.பி.யின் பரேலியில் வசித்து வரும் தஸ்லீம், ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். அதில், கிடைக்கும் பணத்தில் வருமான வரியும் செலுத்தியுள்ளார்.


எனது சகோதரர், 'டிரேடிங் ஹப் 3.0' என்ற யூடியூப் கணக்கை நிர்வகித்து வருகிறார். யூடியூப் மூலம் மொத்தமாக 1.2 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. ஏற்கனவே 4 லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தியுள்ளார். நாங்கள் எந்த தவறான வேலையும் செய்வதில்லை. 


நாங்கள் எங்கள் யூடியூப் சேனலைதான் நடத்தி வருகிறோம். அதில் இருந்து எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இந்த ரெய்டு நன்கு திட்டமிடப்பட்ட சதி" என்றார். இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தஸ்லீமின் தாயார், "என் மகன் தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளான்" என்றார்.


யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்கள், வீடியோக்களை உருவாக்கி வெளியிடுபவர்கள் மீது வருமான வரித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. வருமானத்தை காட்டவில்லை, வருமானத்திற்கு ஏற்ப லாபம் சம்பாதிக்கவில்லை என குற்றஞ்சாட்டி, சமூக ஊடங்க பிரபலங்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


ரெய்டு நடத்தி ஷாக் கொடுத்த வருமான வரித்துறை:


வீடியோ வெளியிடுபவர்களில் பலர் வருமான வரி தாக்கல் செய்வதில்லை அல்லது வருமானத்தை குறைத்து காட்டுவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருவாய் ஈட்டுபவர்கள், மீது எந்தளவுக்கு வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து வரி நிபுணர்களிடையே முரண்பாடுகள் நிலவுகிறது. சமீபத்தில், சிஎன்பிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில், வீடியோ வெளியிட்டு பணம் சம்பாதிப்பவர்களை தொழில்முனைவோராகக் கருதலாம் என்றும், அவர்களின் வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு வரித் தணிக்கை பொருந்தும் என்றும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இருப்பினும், அவர்கள் தங்கள் வழக்கமான வேலையை தவிர்த்து கூடுதலாக வீடியோக்களை உருவாக்குபவர்களாக இருந்தால், குறைந்த நேரத்தைச் செலவிடும் பட்சத்தில், அப்படி கிடைக்கும் வருமானம் "பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்" எனக் கருதப்பட்டு, வருமான வரி விகிதங்களின்படி வரி விதிக்கப்பட வேண்டும் என சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.