சமீப காலமாக, விபத்து சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், டெல்லியில் பெண் ஓட்டி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது காரை மோதி விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


காரின் அடியில் சிக்கிய இளம்பெண்:


அந்த பெண் காரின் அடியில் சிக்கிய நிலையில், கிட்டத்தட்ட 13 கீமீ தூரத்திற்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். நிர்வாண நிலையில் உடலில் பல காயங்களுடன் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 


இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் 6 வயது குழந்தை ஒன்று லாரிக்கு அடியில் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில் உயிரிழந்தது. அக்குழந்தையின் தாத்தாவும்  விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "67 வயதான உதித் நாராயண் சான்சோரியா மற்றும் அவரது பேரன் சாத்விக் ஆகியோர் சந்தைக்கு சென்று கொண்டிருந்தபோது, ​அவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது.


இரண்டு கிலோமீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட 6 வயது சிறுவன்:


இதில், உதித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருசக்கர வாகனத்தின் அடியில் சிக்கிய சாத்விக் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டார்"


கான்பூர் - சாகர் நெடுஞ்சாலையான NH86இல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், டிரக்கின் அருகே செல்லும் இரு சக்கர வாகனங்களின் டிரைவர்கள் லாரியின் ஓட்டுநரை எச்சரிக்க முயற்சிப்பதைக் காணலாம்.


அருகில் இருந்தவர்கள் கற்கள் மற்றும் கற்பாறைகளை சாலையில் போட்டதை அடுத்து லாரி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுநரை அப்பகுதி மக்கள் தாக்கினர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.


டெல்லி சம்பவம்:


டெல்லி இளம்பெண் விபத்தை பொறுத்தவரையில், சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் சம்பவம் நடந்துள்ளது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் இளம்பெண் அஞ்சலி (20) உயிரிழந்தார்.


அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, 12 கிமீ தூரம் வரையில் கார் சென்றுள்ளது. காரின் அடிப்பகுதியில் இளம்பெண்ணின் கைகால்கள் சிக்கிக்கொண்டன.



அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.