நாட்டின் பாதுகாப்பு துறைகளில் நமது பாதுகாப்பு வீரர்களுக்கு பக்கபலமாக இருப்பது மோப்ப நாய்கள். இவைகளின் உதவியால் பல இக்கட்டான வழக்குகளுக்கு துப்புகள் கிடைத்துள்ளது. ராணுவம், காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு என பல பாதுகாப்பு துறைகளிலும் மோப்ப நாய்கள் சேவை பெரியளவில் உதவுகிறது. குறிப்பாக, ரயில்வே பாதுகாப்பு படையில் சுதந்திர தினம், குடியரசு தினம், விழாக்காலங்கள் மற்றும் நெருக்கடியான சூழலில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மோப்ப நாய்களின் உதவி தவிர்க்க முடியாதது ஆகும்.


ஓய்வு பெற்ற மோப்பநாய்:


இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையில் வீரர்களுக்கு பக்கபலமாக இருந்த மோப்பநாய் ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அதற்கு மாலை அணிவித்து வீரர்கள் பிரியாவிடை அனுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் மதுராவில் ரயில்வே பாதுகாப்பு படையின் கீழ் டான் என்ற மோப்ப நாய் பணியாற்றி வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக ரயில்வே பாதுகாப்பு படையில் டான் திறம்பட பணியாற்றி வந்துள்ளது.






இந்த நிலையில் ‘டான்’ மோப்ப நாய் தற்போது ஓய்வு பெற்றுள்ளது. இதையடுத்து, டான் ஏலத்தில் விடப்பட்டு புதிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாயை ரூபாய் 10 ஆயிரத்து 550க்கு ஏலத்தில் வருண் என்ற நபர் வாங்கியுள்ளார். ஓய்வு பெற்றுள்ள டான் நாய்க்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாதுகாப்பு படையில் ஒரு வீரர் ஓய்வு பெறும்போது அளிக்கப்படும் மரியாதையுடன், டான் மோப்ப நாய்க்கு அதிகாரிகள் பிரியாவிடையுடன் வழியனுப்பினர்.


விசாரணையில் உதவி:


ஓய்வு பெற்றுள்ள டான் குறித்து மோப்பநாய்கள் பிரிவு அதிகாரி ஆர்.ஜி. வர்மா கூறியதாவது, “ நான் 2 மாத குட்டியாக டான் நாயை கொண்டு வந்தேன். அதற்கு முறையாக பயிற்சி அளித்து, எனது சொந்த குழந்தை போல பாரத்துக்கொண்டேன். சில மருத்துவ காரணங்களால்  டானால் அரசுப்பணியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், டான் ஏலத்தில் விடப்பட்டுள்ளார். ஆர்.பி.எஃப். பல வழக்குகளில் விசாரணையை மேற்கொள்ள டான் உதவியுள்ளது. கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் டான் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. தற்போது டான் ஏலத்தில் விடப்படுவதால் எனக்கு வருத்தமாக உள்ளது” என்றார்.   


மேலும் படிக்க: டிஜிட்டல் மயமாக்கலில் பின்தங்கி உள்ள நாடுகள் முன்னேற இந்த மென்பொருள் ஒரு வாய்ப்பு... மத்திய இணையமைச்சர் !


மேலும் படிக்க: BJP : 20 பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக தீவிர குற்ற வழக்குகள்...கோடீஸ்வரர்களாக இருக்கும் 80 சதவிகித எம்எல்ஏக்கள்...!