மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகாரில் சட்ட விரோதமாக கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்று வருவது அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவது வழக்கமாகி வருகிறது.


பீகாரின் சாப்ரா, மஷ்ரக் மற்றும் இசுவாபூர் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் குடித்தே இறந்ததால், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக கடந்த வாரம், வைசாலி மாவட்டம் மஹ்னரில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேரும் இறந்தனர்.


சட்டசபையில் எதிரொலி


இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. துணை முதலமைச்சராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வருகிறார்.


கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பினர்.


பாஜகவினர் அமளி


சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதை இந்த அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று குரலெழுப்பினர். இதனால், ஆத்திரம் அடைந்த நிதீஷ் குமார் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைகளை உயர்த்தி பேசினார்.


பின்னர், சபாநாயகர் அவத் பிகாரி செளதரி 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் அவைத் தொடங்கியபோது முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது நிதீஷ் குமார் நாற்காலியில் இல்லை. அவையின் மையப்பகுதிச் சென்று கூச்சலையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.


Kosasthalaiyar River:கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு!


மேலும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், சட்டசபை விவகாரத் துறை அமைச்சர் விஜய் குமார் செளதரி கூறுகையில், "பீகாரில் மது அருந்துவது குற்றம், அதனால் ஏற்படும் மரணங்களுக்கு இழப்பீடு கொடுக்க முடியாது என்பதை பாஜக உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மது அருந்துவதை ஆதரிப்பதற்கு சமமாக இருக்கும்" என்றார்.