கொரோனா ஊரடங்கை மீறி ஆற்றில் குளித்த இளைஞர்களை தோப்புக்கரணம் போடவைத்து தண்டனை அளித்திருக்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தில்.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை அடுத்துள்ள கர்கோன் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தின் காணொலிக் காட்சி, சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.

 

வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் கடந்த புதனன்று அறிவித்திருந்தார். இதுதான் சாக்கு என மக்கள் வீட்டைவிட்டு தேவையில்லாமல் கூடுவதை கட்டாயம் தவிர்க்கவேண்டும் என்றும் அதேசமயம், சட்டென மக்கள் கூட்டமாகத் திரள்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை; மூன்றாவது அலை வராமல் தடுக்கவேண்டுமானால் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது தவிர்க்கமுடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் கர்கோன் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா நகரமான மகேஸ்வரில், நர்மதா ஆற்றில் இளைஞர்கள் கூட்டமாகக் குளித்து கும்மாளமிட்டுள்ளனர். நாளைமறுநாள்வரை ஊரடங்கு கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு காவலர்கள் சென்றனர். தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்தவர்களை கரைக்கு வரச்சொல்லி, அனைவரையும் தோப்புக்கரணம் போடச்செய்தனர். சீருடையில் இருந்த போலீஸ்காரர்கள் மட்டுமின்றி, சீருடை அணியாத காவலர்களும் ஊரடங்கு விதிகளை மீறுவோரைக் கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கை மீறி ஆற்றில் விளையாடிய இளைஞர்களுக்கு ஏன்தான், ஊரடங்கு நேரத்தில் தண்ணீரில் ஆடினோமோ என நினைக்கும்வரை, தோப்புக்கரணம் போடவைத்த பின்னரே போலீசார் அவர்களை விடுவித்தனர். போலீஸ்காரர்களின் இந்தத் தண்டனைக் காட்சியை அவர்களில் யாரோ ஒருவரோ அல்லது அவர்களின் அனுமதியுடன் வேறு யாரோ செல்போன் கேமிராவில் பதிவுசெய்திருப்பது தெரிகிறது. சமூக ஊடகங்களிலும் இந்தக் காட்சியை வெளியிட்டுள்ளனர். 

 

இதற்கிடையே, 5 பேர்வரை பொது இடங்களில் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் கோவிட் இல்லையெனச் சான்றிதழ் பெற்ற 10 பேர்வரை மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அனுமதி என்றும் அரசியல் பெருங்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்றும் முதலமைச்சர் சிவ்ராஜ்ச் சிங் சௌகான் கூறியுள்ளார். இந்தூர், போபால் முதலிய 7 மாவட்டங்களில் அதிக தொற்று பாதிப்பு இருப்பதால், மாநில அளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இந்தப் பகுதிகளில் பழைய நிலையே நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7, 75, 709ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1, 854 பேருக்கு கொரோனா தொற்றியது உறுதிசெய்யப்பட்டது. இதுவரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 7, 891 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, மத்தியப்பிரதேச மாநிலத்தில் 34ஆயிரத்து 332 பேர் கொரோனா பாதிப்பில் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையில் இருக்கின்றனர். இதில், இந்தூரில் 5,974 பேரும் போபாலில் 7,859 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.