உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கன்னெளஜ் நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்ட சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், விசாரணையில் ஒரு செம்ம ட்விஸ்ட் நடந்துள்ளது. லஞ்சம் என்ற வார்த்தைக்கு பதில் உருளைக்கிழங்கு என காவல்துறை அதிகாரி பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, லஞ்சம் கேட்ட உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்டாரா போலீஸ்? சௌரிக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பவல்பூர் சபுன்னா சௌகியில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ராம் கிரிபால் சிங். வழக்கு ஒன்றை முடித்து வைப்பதற்காக இவர் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ராம் கிரிபால் சிங்கை கன்னெளஜ் காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த வழக்கில் துறை ரீதியான விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவரிடம் 5 கிலோ உருளைக்கிழங்கை ராம் கிரிபால் சிங் லஞ்சமாக கேட்பதும் அதற்கு இரண்டு கிலோ மட்டும்தான் அளிக்க முடியும் என விவசாயி சொல்வதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.


 






இதனால், காவல்துறை அதிகாரி கோபம் அடைந்துள்ளார். இறுதியில், 3 கிலோவுக்கு விவசாயி ஒப்பு கொண்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கன்னெளஜ் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "மேற்கண்ட வழக்கின் முதற்கட்ட விசாரணையில் எஸ்.ஐ. ராம்கிரிபால் குற்றம் செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து, 07.08.2024 அன்று, கன்னெளஜ் காவல் கண்காணிப்பாளரால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.