உத்தரப் பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட தன்னுடைய கணவரின் வீட்டின் வெளியே அவரது மனைவி கடந்த 3 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் செய்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் புதிதாக திருமணம் ஆன பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
இன்னும் தொடரும் வரதட்சணை கொடுமை:
நாட்டில் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்துள்ளனர். வரதட்சணை கேட்டு பெண்களை கொலை செய்வது அல்லது அவர்களை கொடுமைப்படுத்தி தற்கொலை செய்ய வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரணவ் சிங்கால். இவருக்கு வயது 32. ஷாலினி சிங்கால் என்ற 30 வயது பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் இவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, இருவரும் இந்தோனேசியாவுக்கு தேனிலவுக்குச் சென்று பத்து நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்துள்ளனர்.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி வரை, தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார் ஷாலினி. அதன் பிறகு அவர் ஹோலிக்காக தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். கடந்த மார்ச் 30ஆம் தேதி, மாமியார் வீட்டுக்கு திரும்பியபோது, அவர் வீட்டிற்குள் செல்லக்கூடாது என மாமியார் கூறியுள்ளார். 50 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால்தான் வீட்டுக்குள் அனுமதிப்பதாக கூறியுள்ளனர்.
போராட்டத்தில் இறங்கிய புதுமணப்பெண்:
இதனால் அவர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், தாங்கள் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தானும் தனது குடும்பத்தினரும் தங்கள் பாதுகாப்பிற்காக அஞ்சுவதாகவும் பிரணவ் சிங்கால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "மீரட் ப்ளூ டிரம் (மனைவி ஒருவர் கணவரை கொலை செய்த சம்பவம்) சம்பவத்திற்குப் பிறகு, அவர் என்ன செய்வார் என்று நாங்கள் பயப்படுகிறோம். அவர் எங்களை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியிருக்கிறார். அதனால்தான் அவரை எங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க முடியாது" என்றார்.
மணப்பெண்ணிடமிருந்து காவல்துறைக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. முறையான புகார் அளிக்கப்பட்டவுடன் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.