திருமண பந்தியில் பன்னீர் வைக்காத காரணத்தால் கடுப்பான இளைஞர் ஒருவர், கல்யாண மண்டபத்தில் மினி பஸ்ஸை மோதி திருமணத்திற்கு வந்தவர்களை காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நிற்காமல், 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை அவர் சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
கல்யாண பந்தியால் வந்த வினை:
கல்யாண பந்தியில் உணவினை முறையாக பரிமாறவில்லை என்றால் வெட்டுக்குத்து சம்பவங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, தென் தமிழகத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருப்பதை கேட்டிருக்கலாம். அப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஹமித்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்நாத் யாதவ். இவரது மகளின் திருமணம் முகல்சராய் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை மாப்பிள்ளை வரவேற்பு நடந்தது. எல்லாமே சுமூகமாக நடந்து வந்தது.
மண்டபத்தில் காரை மோதிய இளைஞர்:
அப்போதுதான், தர்மேந்திர யாதவ் என்பவர் திருமணத்திற்கு வந்துள்ளார். நேரடியாக பந்தி பரிமாறப்படும் இடத்திற்கு சென்று சாப்பிட அமர்ந்துள்ளார். அவருக்கு வைக்கப்பட்ட இலையில் பன்னீர் வைக்காத காரணத்தால் அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜ்நாத் யாதவ் விரிவாக பேசுகையில், "தர்மேந்திர யாதவ் திருமணத்திற்கு வந்து சாப்பிட ஆரம்பித்தார். பனீர் கேட்டார். அது கிடைக்காததால், கோபமடைந்து திருமண விழா நடைபெறும் இடத்திற்கு நடுவே பேருந்தை கொண்டு வந்து மோதினார். இதில், எட்டு பேர் காயமடைந்தனர். ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
நினைத்து பார்க்க முடியாத செயலைச் செய்துள்ளார். திருமண விருந்தினர்கள் மீது டெம்போ டிராவலரை மோதினார். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. உடனே பேருந்தில் மண்டபத்தை விட்டு ஓடிவிட்டார். இதனால், மணமகனின் தந்தை மற்றும் மணமகளின் மாமா உட்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
சம்பவத்திற்குப் பிறகு, மணமகன் தரப்பு அந்த நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும் வரை திருமணம் நடைபெறாது என்று கூறிவிட்டனர். மணமகள் தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்த பின்னரே, மறுநாள் மதியம் 12 மணியளவில் திருமண விழா முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க: Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!