Bhole Baba In Tamil: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், போலோ பாபா என்று அழைக்கப்படுபவர் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டமானது ( ஜூன் 2 ) நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
என்ன நடந்தது?
இந்த ஆன்மிக சொற்பழிவு கூட்டத்தில், ஆன்மீகத் தலைவராக கருதப்படும் போலே பாபாவின் பாதத்தில் ஆசீர்வாதம் பெற மக்கள் திரண்டதாகவும், இதனால் மக்கள் கீழே விழுந்து, எழ முடியாமல் இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் தெரிவிக்கையில், பாபா நடந்து சென்ற பாத மண்ணை எடுத்துச் செல்ல முயலுகையில் கூட்டம் திரண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
காவல்துறை:
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, போலோ பாபாவின் ஆன்மீக கூட்டத்திற்கு, 80,000 பேர் பங்கேற்பதாக கூறி அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக , தகவல்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக் உ.பி காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 121 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஐ.ஜி. சலாப் மாத்தூர் தெரிவித்துள்ளார். மேலும், முக்கிய குற்றவாளியான, பிரகாஷ் மதுக்கர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ. 1 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இச்சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் ஆய்வு செய்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்கும் என தெரிவித்துள்ளார்.
யார் இந்த போலே பாபா?
சூரஜ் பால் சிங் என்ற நபர் , ஆன்மீக சொற்பளிவாளராக மாறியதை தொடர்ந்து, தனது பெயரை நாராயண் சாகர் ஹரி என மாற்றிக் கொண்டார். இவரின் பக்தர்கள், போலே பாபா என அழைக்கின்றனர்.
இவர் உத்தர பிரதேசத்தில் காவல் துறையின் உள்ளூர் உளவு பிரிவில் பணியாற்றியிருக்கிறார். அப்போது, இவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக மிக நீண்ட காலம் சிறை தண்டனையும் அனுபவித்திருக்கிறார்.
பின்னர், விடுதலையான பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று, மீண்டும் காவல்துறையில் இணைந்தார்.
2002 ஆம் ஆண்டு, ஆக்ராவில் பணிபுரிந்து கொண்டிருந்த போது , விருப்ப ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, சொந்த கிராமமான பகதூர் பூருக்கு சென்று தீவிரமாக ஆன்மிக பணியை தொடங்கியிருக்கிறார். தான், கடவுளிடம் பேசுவதாகவும் தெரிவிக்க ஆரம்பித்தார். இவரிடம் பக்தர்கள் கூட்டம் அதிகமானது.
பக்தர்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து, பெரிய அளவில் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார்.
அப்படியிருக்க, சமீப கூட்டத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் , நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்பு, மேலும் இருக்கும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
போலே பாபா , இறந்த பெண்ணை உயிர்ப்பிப்பதாக கூறி ஏமாற்றிய வழக்கிலும், கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர் நடத்தும் கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்றும், இதனால் ஊடகங்களில் பெரும்பாலும் காணப்படுவதில்லை என்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போலோ பாபா என அழைக்கப்படும் இவர், தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.