ஜார்க்கண்ட் முதலமைச்சராக 3ஆவது முறையாக பதவியேற்றுள்ளார் ஹேமந்த் சோரன். ஆட்சி அமைக்குமாறு அவருக்கு அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன்.

Continues below advertisement

முதலில் வரும் 7ஆம் தேதி, பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் அவர்.

ஜார்க்கண்டில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் 5 மாதங்களுக்கு முன்பு தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்பாய் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார்.

Continues below advertisement

ஹேமந்த் சோரன், சிறை செல்ல காரணம் என்ன? நிலக்கரி சுரங்கத்தை தனக்கு தானே குத்தகை விட்டதாக ஹேமந்த் சோரன் மீது பாஜக புகார் அளித்தது. நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இப்படிப்பட்ட சூழலில்தான், முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகி, சம்பாய் சோரன் அந்த பதவிக்கு வந்தார். கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி, ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்தது ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்.

இந்தாண்டின் இறுதியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மாநில முதலமைச்சராக சம்பாய் சோரனே தொடர்வார் என கூறப்பட்டது. தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற பிறகே, ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

சவால்களை சமாளித்து மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்: அதே சமயத்தில், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதில் சம்பாய் சோரனுக்கு விருப்பம் இல்லை என தகவல்கள் வெளியாகின. நேற்று ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்த பிறகு, இது தொடர்பாக சம்பாய் சோரனிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "தலைமை மாறியதும் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹேமந்த் சோரன் திரும்பி வந்த பிறகு, நாங்கள் (கூட்டணி) அவரை எங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தோம். நான் ராஜினாமா செய்தேன். கூட்டணியில் எடுத்த முடிவைத்தான் பின்பற்றுகிறேன்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 30 தொகுதிகளையும் காங்கிரஸ், 16 தொகுதிகளையும் ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியையும் கைப்பற்றியது.