முகத்தில் இருந்த பரு பிரச்னையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
முகப்பரு பிரச்னை
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் அஜித் பாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முகப்பரு பிரச்சனையால் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக பல சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார். இருப்பினும், அவருக்கு பரு பிரச்னை தீரவில்லை. இதன்காரணமாக அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்தப் இளம்பெண் தீவிர மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
திருமணம் ஆகாததால் தற்கொலை
இந்த நிலையில், அந்தப் இளம்பெண் கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளம்பெண்ணின் தாயும் சகோதரியும் கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம்போட்டு கதறி அழுதுள்ளனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை சமாதப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, இந்த தற்கொலை தொடர்பாக பிசாண்டா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத்தினர் வருத்தம்
பல சிகிச்சைகள் செய்தும், பருக்கள் குணமாகாததால், இளம்பெண் மனமுடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். “எங்களுக்கு பல திருமண வரன்கள் வந்தன. ஆனால் பெண்ணின் பருக்கள் நிறைந்த முகத்தைப் பார்த்தபோது, பலர் அவரை நிராகரித்தனர்” என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.
உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிசாண்டா காவல்நிலையப் பொறுப்பாளர் கே.கே.பாண்டே தெரிவித்தார்.
முகத்தில் ஏற்பட்ட பருவால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்