17 ஆண்டுகள் தேடியும் காணாமல் போன மகன் கிடைக்காததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன சிறுவன்:
கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.ராஜு. இவருக்கு மினி என்பவருடன் திருமணமாகி 5 வயதில் ராகுல் என்ற மகனும் இருந்தார். குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார் ராஜு. இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு மே 18ம் தேதி ராஜுவின் மகன் ராகுல் காணாமல் போய்விட்டதாக தகவல் கிடைக்க மறுநாளே கேரளா திரும்பிய ராஜு, மகனை கேரளாவில் பல்வேறு இடங்களில் தேடினார். கேரள காவல்துறை, க்ரைம் ப்ரான்ச் மற்றும் சிபிஐ காவல்துறையின் 3 தனிப்படைகள் தேடியது. ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. தங்களது வீட்டிற்கு ராகுலின் பெயரை வைத்த ராஜுவும், மினியும் தங்கள் மகனைப்பற்றிய செய்தி எதுவும் கிடைக்காதா என்று காத்திருந்தனர். ராகுலுக்கு தங்கள் வீட்டின் தொலைபேசி எண் தெரியும் என்பதால், ராகுல் அழைக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி அவர் லேண்ட்லைன் எண்ணை கூட தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ராகுல் காணாமல் போன 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ஷிவானி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனாலும் தங்கள் மகன் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் மட்டும் இருவருக்கும் அப்படியே இருந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய சடலம்:
தன் மகனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மீண்டும் குவைத் திரும்பினார் ராஜு. ஆனால் உடல்நிலை மோசமாக இருந்ததால் அங்கிருந்து கேரளா திரும்பிவிட்டார். ராகுலை தேடி எங்கும் கிடைக்காததால், 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் சிறுவன் பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால், இந்த வழக்கை முடித்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டது சிபிஐ. சிபிஐ-யின் மூன்று தனிப்படைகள் அடையாளம் தெரியாத சடலங்கள், காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரங்களை அருகில் உள்ள மாநிலங்களில் தேடுதல் நடத்தியபோது, ஆந்திராவில் ரயில்வே பாதை அருகே ஒரு சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்:
இதற்கிடையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கிருஷ்ண பிள்ளை என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் தான் ராகுலை கொன்றதாகவும், ஆழப்புழாவில் ஆளில்லாத பகுதியில் சிறுவனின் உடலை புதைத்ததாகவும் கூறினார். இதனையடுத்து அந்த பகுதியில் தேடியதில் எந்த உடலும் சிக்கவில்லை. இந்த வழக்கில் எந்த முடிவும் கிடைக்காததால், வழக்கை முடித்து வைக்கக் கோரி கடந்த 2014ல் கொச்சி நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது. வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டாலும் ராஜுவிற்கு தன் மகன் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.
52 வயதாகிவிட்ட நிலையில் வேலைக்கு எதுவும் போகாத ராஜு தன் மனைவி பகுதிநேரமாக பார்த்து வரும் வேலையால் கிடைக்கும் வருமானத்திலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் தான் வேலை தேடி கொச்சியில் நேர்முகத் தேர்வை முடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 18ம் தேதியுடன் தன் மகன் காணாமல் போய் 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் விரக்தியில் இருந்த ராஜு தற்கொலை செய்துகொண்டார். எனினும், மகன் கிடைக்காதது தான் காரணமா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மர்மமாகவே தொடரும் வழக்கு:
கேரளாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம், கேரள வரலாற்றில் முடித்துவைக்கப்படாத மர்ம வழக்காகவே இன்றும் தொடர்கிறது. சிறுவன் எப்படி காணாமல் போனான்? சிறுவனின் நிலை என்ன? சிபிஐ, மாநில காவல்துறை பல ஆண்டுகளாகத் தேடியும் சிறுவனை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? என்பது இன்றும் புரியாத புதிராகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.