மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய தகவல்நுட்ப விதிகளை முன்னிட்டு, நாடளவில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக ஆயிரத்து 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.


உத்தரப் பிரதேச காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார் லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் கருத்துகளைப் பதிந்ததாகவும் வதந்திகளைப் பரப்பியதாகவும் செய்திகளை பூதாகரப்படுத்தியதாகவும் வெறுப்புணர்வைப் பரப்பியதாகவும் மாநிலம் முழுவதும் பலவகைகளில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சென்ற மாதம் வரையிலான 11 மாதங்களில் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 118 முதல் தகவல் அறிக்கைகள் வதந்திகளைப் பரப்பியது, உண்மைகளைப் பூதாகரப்படுத்தியது ஆகியவை தொடர்பானவை என்று கூடுதல் தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.


சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் குலைக்கும்வகையில் மக்களைத் தூண்டிவிடும்வகையில் சமூக ஊடகங்களில் கருத்திட்டதாக 366 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற 623 முதல் தகவல் அறிக்கைகள், எதிர்ப்புக்கு உரிய கருத்து, தகவல்கள் என பல்வேறு காரணங்களுக்காக பதியப்பட்டு இருக்கின்றன என்றும் பிரசாந்த் குமார் கூறினார்.


லக்னோவில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சமூக ஊடகங்களுக்கான தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் சமூக ஊடகக் காவல் பிரிவினர், காலமுறைப்படி தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகவும் சட்டத்துக்கு விரோதமாகவும் பதியப்படும் தகவல்கள், கருத்துகளை கண்காணித்துக்கொண்டு இருந்துவருகின்றனர் என்றும் பிரசாந்த் குமார் கூறினார்.


முன்னதாக, உத்தரப் பிரதேச காவல் துறையின் சார்பில், முதல் முறையாக நேற்று டுவிட்டர் நிறுவனத்தின் மீதும் வழக்கு பதியப்பட்டது. சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்திருந்த சட்டப் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து, உ.பி. காவல் துறை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆங்கில செய்தி ஊடக இணையதளமான வயர் மீதும் பல ஊடகத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஒரே விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. முஸ்லிம் முதியவர் ஒருவரை கும்பல் ஒன்று தாக்கும் காணொலியை வெளியிட்டதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வெவ்வேறு மதத்தினரிடையே பகைமையை வளர்க்கும் வகையில் இந்தக் காணொலியைப் பதிவிட்டுள்ளனர் என்று உ.பி. காவல்துறை காரணம் கூறியுள்ளது. காசியாபாத் மாவட்டம் லோனி காவல்நிலையத்தினர் இந்த வழக்கைப் பதிவுசெய்துள்ளனர்.


டுவிட்டர் நிறுவனத்தின் மீதான பங்கைப் பொறுத்தவரை, சர்ச்சைக்கு உரிய இந்தக் காணொலியை வெளியிட்டதை குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட அந்த முதியவர் பெயர் சுபி அப்துல் சமது என்பதையும் வன்முறை கும்பல் அவரின் தாடியை வெட்டியதும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கும்பல் அப்துல் சமதுவை வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தியது என அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேச காவல் துறையோ இதில் சமூகரீதியிலான காரணம் எதுவும் இல்லை என்றும் சமது விற்ற ஆம்லெட்டில் தரம் சரியில்லை என்றே அவரை அந்த கும்பல் தாக்கியதாகவும் தங்கள் விசாரணையில் தெரிவதாகக் கூறியுள்ளது.