உத்தர பிரதேசம் மாநிலம் இட்டாவாவில் பெண் ஒருவருக்கு அவரது உறவினர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்த காரணத்தால் தான் கர்ப்பமானதாக பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். 


கர்ப்பமான ஆறாவது மாதத்தில் வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி  சுகாதார நிலையத்திற்குச் சென்ற அந்த பெண், குறைமாத குழந்தை பிறந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அவர்களிடம் பிளாஸ்டிக் பொம்மை ஒன்றை எடுத்து காண்பித்துள்ளார்.


இது உண்மையான குழந்தை இல்லை, பிளாஸ்டிக் பொம்மை என்று சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர் கூறியபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. கர்ப்பம் தொடர்பான பிற ஆதாரங்கள் மற்றும் எக்ஸ்ரேக்களையும் மருத்துவர் சோதனை செய்தார். ஆனால், அவை அனைத்தும் போலி என்று கண்டறியப்பட்டது.


இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளரும் மருத்துவருமான ஹர்சித் கூறுகையில், "கர்ப்பம் தொடர்பான பரிசோதனைகளுக்காக அல்லாமல், வயிற்றில் உள்ள நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக அந்தப் பெண் தொடர்ந்து சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார்.


அந்த பெண்ணுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் கர்ப்பம் தரிக்க முடியவில்லை. எனவே, உறவினர்களின் அவதூறுகளிலிருந்து விடுபட, அவர் இந்த கதையை உருவாக்கி உள்ளார்.


அந்த பெண்ணுக்கு திருமணமாகி 18 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ளது. ஆனால், கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அவரை கேலி செய்தனர்.


திருமணமானவுடனே குழந்தை பெற்ற கொள்ள வேண்டும் என்பது பொது சமூகத்தின் விருப்பமாக உள்ளது. ஆனால், குழந்தை பெற்ற கொள்ள வேண்டுமா அல்லது குழந்தை பெற்ற கொள்ள கூடாதா என்பதை சம்பந்தப்பட்ட தம்பதியினர்தான் முடிவு எடுக்க வேண்டும். அது, அவர்களின் தனிப்பட்ட உரிமை.


தனிநபரின் வாழ்க்கையில் தலையிடுவது என்பதே உரிமை மீறல் ஆகும். அதை தாண்டி, குழந்தை பெற்ற கொள்ள வில்லையா என சமூகமும் உறவினர்களும் சேர்ந்து தம்பதியினரிடம் கேட்கும்போது அவர்களுக்கு மிக பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. இது மிக பெரிய மன உளைச்சலுக்கு அவர்களை உள்ளாக்குகிறது. 


 






குறிப்பாக, பெண்களுக்கு இதனால் மிக பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. தற்போது, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும் உறவினர் கொடுத்த அழுத்தமே காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒட்டு மொத்த சமூகமும் முன் வர வேண்டும்.