ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பல நாள்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. 


74 வயதான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை செய்து கொள்வதற்காக கடந்த மாதம் சிங்கப்பூருக்கு சென்றிருந்தார்.


இந்நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள், அவருக்கு சிறுநீரகம் அளிக்க உள்ளதாக நெருங்கிய குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள அவரது மகள் ரோஷினி ஆச்சார்யா, அவரது தந்தைக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளார் என குடும்ப உறுப்பினர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


தற்போது டெல்லியில் உள்ள லாலு யாதவ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சரான லாலு, கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லி மற்றும் ராஞ்சியில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 






சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எங்கு, எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.


செப்டம்பர் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கான லாலுவின் மனுவை டெல்லி நீதிமன்றம் அனுமதித்தது. சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை, வெளிநாடு செல்ல லாலுவுக்கு அனுமதி வழங்கினார். தனது பாஸ்போர்ட்டை விடுவிக்கக் கோரிய லாலுவின் மனுவை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 16ஆம் தேதி ஏற்று கொண்டது.


இதற்கிடையில், லாலுவின் அரசியல் வாரிசான அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ், அவருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்களிடமிருந்து பிறந்தநாள் பரிசாக மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.


நவம்பர் 9 ஆம் தேதி, 33ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அரசு விழாவில் தனது இந்த விருப்பத்தை தெரிவித்தார். 


"பாஜகவில் பலர் தனக்கு வாழ்த்து தெரிவித்ததை சுட்டிக்காட்டி, பரிசு கேட்க விரும்புகிறீர்களா என்று சில பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்துதான் நான் எதிர்பார்க்கும் மிகப்பெரிய பரிசு. இது மாநிலத்தின் இளைஞர்களுக்கு பயனளிக்கும்" என்றார்.