சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பின்மல் நகரில் நீலகண்ட மகாதேவ் கோயிலின் சிலை பிரதிஷ்டை விழாவில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


கோயிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோயிலை போன்று சேதப்படுத்தப்பட்ட பிற இந்து மத தலங்களை மீட்டெடுக்க மக்கள் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், "நமது வழிபாட்டுத் தலங்கள் அனைத்து காலகட்டத்திலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. அயோத்தியைப் போல அவற்றை மீட்டெடுப்பதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். 


தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டுவதற்கு பக்தர்கள் அனைவரும் பங்களித்துள்ளீர்கள். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தங்கள் பாரம்பரியத்தை மதிக்க வேண்டும் என்றும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி எடுக்க வைத்தார். 


1400 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீலகண்டப் பெருமானின் திருக்கோயில் புனரமைக்கப்பட்டது பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான எடுத்துக்காட்டு. 


மதம், கர்மா, பக்தி மற்றும் சக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மையப் புள்ளியாக ராஜஸ்தான் உள்ளது. மதத்தின் உண்மையான ரகசியங்களை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் ராஜஸ்தானுக்கு வர வேண்டும்" என்றார்.


பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்தியாவுக்கு தேசிய மதம் என ஒன்று இல்லாத சூழலில், யோகியின் கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


அரசியலமைப்பின்படி, இந்தியா மதச்சார்பற்ற நாடாகும். பல்வேறு இனக்குழுக்கள், மத பிரிவினர், பல்வேறு மொழி பேசுவோர் என பன்முக கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தியா உள்ளது.


இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தாலும், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கி நாட்டை சமதர்ம நாடாக அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது.


அண்ணல் காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள், இந்தியாவை மதச்சார்பற்ற சமதர்ம சமத்துவ நாடாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.


 






ஆனால், தற்போது, சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வது நாட்டை பின்னோக்கி எடுத்து செல்லும் செயல் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.