2 விமானங்கள் விபத்து:
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் படுகாயமடைந்த விமானி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குவாலியர் விமான தளத்தில் இருந்து 2 விமானங்களும் வழக்கம்போல் காலையில் ஒத்திகைக்காக புறப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விமானங்களில் இருந்த 3 விமானிகளில் இரண்டு பேர் லேசான காயங்களுடன் தப்பித்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மோதிக்கொண்டிருக்க வாய்ப்பு:
சுகோய்-30 விமானத்தில் 2 விமானிகளும், மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானியும் இருந்ததாகவும், அதில் 2 விமானிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதா என்பதை உறுதிப்படுத்த விமானப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், போர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் அதிவேகத்தில் வானில் பறந்த போது, இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டிருக்கலாம் எனவும், கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என்றும் பாதுகாப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர்:
இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து, விமானப்படைத் தளபதியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் உத்தரவு:
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா அருகே சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானதில், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க, இந்திய விமானப்படைக்கு உதவுமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ட்வீட் செய்துள்ளார்.
ராஜஸ்தானில் விபத்து:
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமான படைக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்றும் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்துள்ளானது. இதில் விமானி அதிருஷ்டவசமாக லேசான காயங்களுடன், உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர் என்றும் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் ஒரேநாளில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.