உத்தரப் பிரதேசத்தில் தன்னுடைய சொந்த குழந்தையை குழந்தையின் தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த குழந்தையை தந்தையே கொலை செய்ததை விட, அவர் கொலை செய்ததற்கான காரணம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு இருந்துள்ளது. இந்த சூழலில், குழந்தை அவரது வீட்டுக்கு சென்றது. இதனால், கோபம் அடைந்த அந்த நபர், தன்னுடைய குழந்தையை கொலை செய்துள்ளார்.


குழந்தையை கொன்ற தந்தை.. பதறவைக்கும் காரணம்:


உத்தரப் பிரதேசம் சீதாபூரை சேர்ந்தவர் மோகித் மிஸ்ரா. இவருக்கு வயது 40. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, மோகித் மிஸ்ராவின் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டுக்கு சென்றுள்ளது.


இதனால் கோபம் அடைந்த மோகித் மிஸ்ரா, தன்னுடைய குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, குழந்தை தனது வீட்டிற்கு அருகில் இருந்து காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


சொல்லப்போனால், காணாமல் போனதாக புகார் அளித்தது குழந்தையின் தந்தை மோகித் தான். நாங்கள் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கண்டுபிடிக்க நான்கு குழுக்கள் அமைத்தோம். தேடுதலின் போது, ​​அவருடைய உடலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்தோம். மறுநாள், மற்ற பாகங்களைக் கண்டுபிடித்தோம். இப்போது, ​​அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.


நடந்தது என்ன?


திடீரென, தந்தை தனது தொலைபேசியை மனைவியிடம் கொடுத்துவிட்டு காணாமல் போனார். அவர் காணாமல் போனதும், குழந்தை காணாமல் போவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டோம். தந்தை மீண்டும் தோன்றியபோது, ​​அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் அவர் சிறுமியைக் கொன்று உடலை அப்புறப்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.


மோகித் குடும்பத்தினரும், பக்கத்து வீட்டுக்காரரான ராமுவின் குடும்பத்தினரும் முன்பு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அடிக்கடி ஒருவரையொருவர் வீட்டுக்கு சென்று சந்தித்து கொள்வார்கள். சில நாட்களுக்கு முன்பு, இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதை நிறுத்திவிட்டனர்.


மோகித் தனது மகளிடம் ராமுவின் வீட்டிற்கு செல்வதை நிறுத்துமாறு பலமுறை கூறினார். ஆனால், சொல்வதை கேட்காமல் ராமுவின் வீட்டுக்கு குழந்தை சென்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று, ராமுவின் வீட்டிலிருந்து தனது மகள் வருவதைக் கண்டதாக மோஹித் கூறினார்.


இது அவரை மிகவும் கோபப்படுத்தியது. குழந்தையை தனது பைக்கில் உட்கார வைத்து, ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று, துணிகளைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், உடலை ஒரு வயலில் வீசினார்" என்றார்.