நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிக முக்கியமானதாகும். சக்தி வழிபாட்டின் உச்சமாக, துர்கை அம்மனின் அருளை பெறுவதற்கான ஒரு உன்னதமான வழிபாடாக நவராத்திரி வழிபாடு கருதப்படுகிறது. நவராத்திரி என்றாலே ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது தான் வழக்கம். ஆனால் இந்த முறை அபூர்வமாக நவராத்திரி 10 நாட்கள் வருகிறது. நவராத்திரி வழிபாட்டினை முறையாக மேற்கொள்வதால் எதிர்மறை ஆற்றல்களை விரட்டுவதுடன் துர்கை அம்மனின் அருளையும் பெற முடியும் என நம்பப்படுகிறது. சாரதா நவராத்திரி என்பது செழிப்பு, அமைதி ஆகியவற்றை வழங்கக் கூடியதாகும். இந்த மங்களகரமான காலத்தில் நம்முடைய வேண்டுதல்கள், விருப்பங்கள் நிறைவேறுவதற்காக பல்வேறு முறைகளில் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

Continues below advertisement

இந்த நிலையில் குறிப்பாக திருவனந்தபுரத்தில் கேரளா தேவசம் போர்டு சார்பில் வரும் 23-ஆம் தேதி முதல் 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய உற்சவர் சிலைகள் மற்றும் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.

Continues below advertisement

அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வர். விழா பத்து நாட்கள் முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் இன்று தொடங்குகிறது. அதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்படும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஊர்வலம் தக்கலை அருகே உள்ள பத்பநாபபுரம் அரண்மனையை நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது.

நேற்று காலையில் பத்மநாபபுரம் அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த மன்னர்கால உடைவாள் கைமாற்றம் நடைபெற்றது. பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும் வழி எங்கும் பக்தர்கள் பூ, பழங்களுடன் சுவாமி விக்கிரகங்களுக்கு பூஜைகள் செய்து வரவேற்பு அளித்து வழியனுப்பி வைத்தனர்.

நேற்று இரவு சாமி விக்கிரக ஊர்வலம் குழித்துறையை அடைந்தது.குழித்துறையில் இருந்து இன்று காலை போலீஸ் அணிவகுப்புடன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் வழிநெடுக பூ, வாழைக்குலைகளுடன், பூஜை செய்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இன்று மதியம் குமரி கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் இரு மாநில அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் சுவாமி சிலைகளை கேரளா தேவசம் போர்டிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் கேரளா அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.