வடகிழக்கு டெல்லி கலவரத்தின் பெரிய சதி வழக்கில் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித்தின் ஜாமீன் மனுவை இன்று விசாரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இந்தியப் பிரதமரைப் பற்றி 'ஜூம்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியானதா என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம். அரசாங்கத்தை விமர்சிக்கும்போது அதற்கு ஒரு வரையறை இருக்கவேண்டும் என கருத்து கூறியுள்ளது. ஜூம்லா என்னும் சொல்லுக்கு தவறான வாக்குறுதி என்று பொருள்.
“அவர் உரையில் பிரதமரைப் பற்றி என்ன சொல்கிறார்? சில 'தேவையற்ற' வார்த்தை பயன்படுத்தப்பட்டது மற்றும் அதற்குப் பிறகு ... இந்த 'ஜூம்லா' என்கிற சொல்லும் இந்தியப் பிரதமருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சரியானதா?" என பிப்ரவரி 2020ல் அமராவதியில் காலித் பிரதமருக்கு எதிராகப் பேசிய கருத்து பற்றி கேள்வி எழுப்பியுள்ளது.
காலித் சார்பாக நீதிமன்றத்தின் அவதானிப்புக்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ், அரசாங்கத்தை விமர்சிப்பது சட்டவிரோதமானது அல்ல என்று வாதிட்டார். “அரசாங்கத்தை விமர்சிப்பது குற்றமாகிவிட முடியாது. அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் ஒருவருக்கு UAPA குற்றச்சாட்டுடன் 583 நாட்கள் சிறைவாசம் கொடுப்பது நியாயமில்லை. நாம் அவ்வளவு சகிப்புத்தன்மையற்றவர்களாக ஆக முடியாது. இப்படி எச்சரிகை உணர்வுடனேயே மக்கள் பேச முடியாது” என்று வாதிட்டார். காலித் மீதான எஃப்ஐஆர் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற சூழலின் விளைவாகும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 22 அன்று, நீதிபதி சித்தார்த் மிருதுல் மற்றும் நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இந்த மனுவை விசாரித்தபோது, குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக, ’அமராவதியில் காலித் பேசியது, புண்படுத்துவதாகவும், அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கது” என்றும் கூறி இருந்தது. காலித் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் முன் அவர் ஆற்றிய உரையின் உள்ளடக்கத்தைப் படித்த பிறகு
“இது அவமானகரமானது, அருவருப்பானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? நீங்கள் பயன்படுத்திய சொற்கள்....அவை மக்களைத் தூண்டுவதாக நீங்கள் நினைக்கவில்லையா? இது தாக்குதலுக்குரியது. இந்த உரையில் நீங்கள் இவ்வாறு சொல்வது இது முதல் முறையல்ல. இதை நீங்கள் ஐந்து முறையாவது சொல்லியிருக்கிறீர்கள்” என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.
”1920ம் ஆண்டு மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார் என்றும் அப்போது தொடங்கப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் கல்வி நிறுவனங்களில் முதன்மையானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. காந்தியின் அழைப்புக்குப் பிறகு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அந்தப் பல்கலைக்க்ழகம்தான் இப்போது தோட்டாக்களை எதிர்கொள்கிறது, அவதூறுகளைச் சந்தித்து வருகிறது, மற்றும் தேச விரோதிகளின் குகை என்று அழைக்கப்படுகிறது” என்றும் காலித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.