சமீப காலமாக, விமானத்தில் தொடர் சர்ச்சை நடந்து வரும் சூழலில், டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் பயணி செய்த ஒரு சம்பவம் முகம் சுழிக்கும் விதமாக அமைந்துள்ளது. 


இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பட காத்திருக்கும் பகுதியின் மூன்றாவது நுழைவாயிலில் குடிபோதையில் இருந்த 39 வயது நபர் சிறுநீர் கழித்துள்ளார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. 


சம்பவத்தில் ஈடுபட்ட பிகார் மாநிலத்தை சேர்ந்த ஜவஹர் அலி கான் கைது செய்யப்பட்டு அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது நுழைவாயில் புறப்படும் பகுதியில் கேட் எண்-6இல் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக தகவல் கிடைத்தது.


கான் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. பொது இடத்தில் சத்தமிட்டு மற்றவர்களை கேட்ட வார்த்தைகளில் திட்டி தொந்தரவு செய்துள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகருக்கு அவர் செல்ல இருந்தார். சப்தர்ஜங் மருத்துவமனையில் கான் பரிசோதிக்கப்பட்டபோது அவர் மது அருந்தியது தெரியவந்தது.


இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 294 (ஆபாசமாக பேசி, பாடல்கள் பாடியது) மற்றும் 510 (பொதுவெளியில் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டது) ஆகியவற்றின் கீழ் விமான நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்" என்றார்.


சமீபத்தில், விமானப் பணிப் பெண்ணிடம் வெளிநாட்டு பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.


மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர், ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது 14 நாள்கள் நீதிமன்ற காவலில் உள்ளார். விமானத்தை இயக்கிய விமானி, விமான குழுவினர் நான்கு பேருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமானத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டும், விளக்கம் கேட்டும் விமான குழுவினர் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நடந்து வரும் விசாரணை முடிவடைந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும்" என்றார்.