வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களை பயன்படுத்தி விரைவில் UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற உள்ளனர்.


முதற்கட்டமாக, 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI சேவைகளை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. 


அவர்கள், தங்களின் இந்திய மொபைல் எண்களை சாராமலேயே UPI சேவையை பெறலாம். சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது.


இது தொடர்பாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, "சர்வதேச எண்களை பயன்படுத்தி என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்குகளை திறந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.


இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என வங்கிகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


என்ஆர்இ வங்கி கணக்கு என்பது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் வருமானத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு. என்ஆர்ஓ வங்கி கணக்கு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்காகும்.


UPI சேவையை வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்படுத்த ஒரே நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்படி கணக்குகள் முறையாக உள்ளதா என அந்தந்த வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.


இந்த விவகாரத்தில், பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  


RuPay டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2,600 கோடி ரூபாய் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள், வெளிவாடுகளில் வாழும் குடும்பங்கள், உள்ளூர் வர்த்தகத்திற்கு மத்திய அரசின் இந்த முடிவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இத்திட்டத்தின் கீழ், RuPay மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.


 






கடந்த 6 ஆண்டுகளில், UPI மூலம் நடந்த பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.