உத்தரப்பிரதேசத்தில் 30 வயதான பெண்ணுக்கு சிசேரியன் செய்தபொழுது, அரசு மருத்துவர்கள் அலட்சியமாக பெண்ணின் அடி வயிற்றுக்குள் சிறிய துணியினை வைத்து தைத்த நிலையில் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து  அப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலங்களாக மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சை வரும் நோயாளிகள் ஏதாவது ஒரு விதத்தில் உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் சிசேரியன் மூலம் குழந்தையினைப் பெற்றெடுத்த தாய்க்கு நேர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ராமாபூர் பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ். இவருடைய மனைவி நீலம் என்பவருக்கு கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தையினை வெளியில் எடுத்த நிலையில், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது தான், அப்பெண்ணின் அடி வயிற்றினுள் ஒரு சிறிய துண்டு துணியினை அலட்சியமாக வைத்துவிட்டு தையல் போட்டுள்ளனர்.


இதனையடுத்து அப்பெண்ணிற்கு வயிற்று வலி மற்றும் கடுமையான உடல் நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து என்ன பிரச்சனை என்று தெரியாத நிலையில் அப்பெண்ணின் கணவர், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் அதில் எந்தவித பலனும் இல்லாத நிலையில் தான் பாதிப்புக்குள்ளாகியிருந்த அப்பெண்ணினை லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.



குழந்தைப்பிறந்தவுடன் திடீரென அப்பெண்ணுக்கு ஏன் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது? என்பதை அறிந்துக்கொள்வதற்காக, லக்னோவில் உள்ள  கிங் ஜார்ஜ் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அப்பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சையின்போது ஒரு துணியினை வயிற்றில் வைத்து அரசு மருத்துவர்கள் தைத்திருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருந்தத் துணியினை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இருந்தபோதும் அப்பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்துவிட்டார். அரசு மருத்துவர்களின் தவறான அலட்சியத்தால் குழந்தையைப் பெற்றெடுத்த 7 மாதத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



முன்னதாக இப்பிரச்சனை குறித்து, அப்பெண்ணின் கணவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  இந்த குற்றச்சாட்டை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ராஜேஷ்குமார் அமைத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த விசாரணையும், என்ன நடந்தது என்பது பற்றி என்னிடம் கேட்கவில்லை என்று உயிரிழந்த பெண்ணின் கணவர் மனோஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுத்தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கேட்க முயன்ற பொழுது எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.