சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மை சமூகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர் கதையாகி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 


இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் நின்றபாடில்லை.


மற்ற மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை அடிக்க சொன்ன ஆசிரியை:


இப்படிப்பட்ட சூழலில், உத்தரப் பிரதேசத்தில் சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை ஆசிரியை அறைய சொன்ன சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இஸ்லாமிய மாணவனை அறையும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர் உத்தரவிடுவது பதிவாகியுள்ளது.


இந்த நிலையில், சக மாணவர்களை விட்டு இஸ்லாமிய மாணவனை அறைய சொன்னதில் மதவாத நோக்கம் இல்லை என அந்த ஆசிரியை விளக்கம் அளித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை திரிப்தா தியாகி, இந்த சம்பவம் குறித்து அளித்த விளக்கத்தில், "சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாததால் சில மாணவர்களை விட்டு அவனை அறையும்படி சொன்னேன்.


அந்த மாணவனிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் இருந்து அழுத்தம் வந்தது. நான் மாற்றுத்திறனாளி. அதனால் சில மாணவர்களை விட்டு அறைந்தேன். அதனால்தான், அவர் வீட்டுப்பாடம் செய்யத் தொடங்கினான்" என்றார். 


நடந்தது என்ன?


அந்த வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக ஆசிரியை பயன்படுத்திய புண்படுத்தும் வார்த்தைகள் குறித்து விளக்கம் அளித்த அவர், "முழு சம்பவத்தையும் மதவாத கோணத்தில் திசை திருப்ப வீடியோ எடிட் செய்யபப்பட்டது. குழந்தையின் உறவினர் வகுப்பில் அமர்ந்திருந்தார். அவரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ பின்னர் திரிக்கப்பட்டுள்ளது" என்றார்.


"இது ஒரு சிறிய பிரச்னை, வீடியோ வைரலான பிறகு இது மிகைப்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறிய அவர், "இது என்னுடைய நோக்கம் அல்ல. அவர்கள் அனைவரும் என் குழந்தைகளைப் போன்றவர்கள். நான் என் தவறை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இது தேவையில்லாமல் ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டது.


இது ஒரு சிறிய பிரச்னை என்பதை நான் அரசியல்வாதிகளிடம் கூற விரும்புகிறேன். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர். ஆனால், அதைப் பற்றி ட்வீட் செய்வது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. இதுபோன்ற தினசரி பிரச்னைகளை வைரலாக்கினால் ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள்" என்றார்.


இதுகுறித்து முசாபர்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் அரவிந்த் மல்லப்பா பங்கரி கூறுகையில், "ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் முதலில் புகார் கொடுக்க சம்மதிக்கவில்லை. ஆனால், இன்று காலை உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அது பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.