உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர் ஒருவரை சிலர் இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20,000 ரூபாய் பணத்தை கடனாக அந்த மாணவர் சிலரிடம் வாங்கியுள்ளார்.


உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி:


வாங்கிய பணத்தை அந்த மாணவன் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதனால், அந்த பணத்தை திருப்பி தர தாமதமாகியுள்ளது. இதையடுத்து, அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். வட்டியுடன் சேர்ந்து 50,000 ரூபாய் பணத்தை தர வேண்டும் என கடன் அளித்தவர்கள் நெருக்கடி தந்துள்ளனர்.


வட்டி கொடுக்க மாணவர் மறுத்ததால், பிணைக் கைதியாக பிடித்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாணவனை நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்பில் செங்கலை கட்டி தொங்கவிட்டு சித்திரவதை செய்துள்ளனர். எல்பிஜி கேன் மூலம் மாணவரின் முகத்தை எரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.


மாணவனை சித்திரவதை செய்வதை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


மாணவருக்கு நேர்ந்த கொடூரம்:


இந்த சம்பவம் தொடர்பாக ஆறு மைனர்களை உத்தர பிரதேச காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முக்கிய குற்றவாளிகள் உட்பட ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது" என்றார். இதற்கிடையே, ககேடியோ காவல் நிலையத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவரின் அண்ணி புகார் அளித்துள்ளார்.


சிறுவனின் நண்பர்கள் பதினொரு பேர் தனது மைத்துனரை பிணைக் கைதியாக வைத்து கடந்த 10 நாட்களாக  சித்திரவதை செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் ஆர். எஸ். கவுதம் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர் எட்டாவா மாவட்டத்தில் உள்ள லவேடி காவல் நிலையத்தில் வசிக்கிறார்.


 






இடைநிலைத் தேர்வை முடித்துவிட்டு, காகேடியோ கோச்சிங் சென்டரில் சேர்ந்து நீட் தேர்வுக்குத் தயாராக கான்பூருக்கு சென்றார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நண்பர்களும் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்" என்றார்.