நாட்டின் அதிக சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியான யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.விற்கும், எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி கடுமையாக நிலவி வருகிறது.
மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 350 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிட உள்ளனர். சமாஜ்வாதி கட்சியினருடன் என்.சி.பி. எனப்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த இரு கட்சி தலைவர்கள் இடையே இன்று நடைபெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதன்படி, உத்தரபிரதேச தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சி கூட்டணியின் முதல் வேட்பாளராக கே.கே.சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தேசியவாத காங்கிரசின் தலைவராக பதவி வகிப்பவர்தான் கே.கே.சர்மா. இவர் வரும் சட்டசபை தேர்தலில் பூலாந்த்சரில் உள்ள அனுப்சர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுதொடர்பாக, அகிலேஷ் யாதவ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 2022ல் மாற்றம் என்றும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக லக்னோவில் சமாஜ்வாதி கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் தளம், சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜன்வாடி கட்சி, பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி லோகியா ஆகிய கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். சுமார் 3 மணிநேரம் இந்த கூட்டம் நடைபெற்றது.
சமாஜ்வாதி 350 தொகுதிகளிலும், ராஷ்ட்ரியா லோக் தளம் 36 இடங்களிலும், சுகெல்தேவ் பாரதிய சமாஜ்கட்சி 10 இடங்களிலும், பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி 10 இடங்ளிலும் மற்ற இடங்ளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிட உள்ளனர்.
நாட்டிலே மிகப்பெரிய சட்டசபை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக சக்தி கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்வதால் எப்போதுமே உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உத்தரபிரதேசம் மட்டுமின்றி சண்டிகர், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்