18ஆவது மக்களவையின் முதல் அமர்வு இன்று கூடியது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக அமைந்ததை தொடர்ந்து புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


இப்படிப்பட்ட சூழலில், மக்களவை கூடியதால் நாடாளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், இடைக்கால சபாநாயகர் பதவி விவகாரம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே பெரும் பிரச்னையாக வெடித்தது.


பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத முதல் அமர்வு:


நீண்ட காலம் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கே இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், எட்டாவது முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ்-க்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், அவர் தொடர்ச்சியாக எம்பியாக பதவி வகிக்கவில்லை எனக் கூறி, ஏழாவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்-க்கு இடைக்கால சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையானது.


இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக 18ஆவது மக்களவையின் முதல் அமர்வுக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் ஒன்றாக சென்றனர். நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை இருந்த பகுதியில் ஒன்று திரண்டு அங்கிருந்து அணிவகுத்து நாடாளுமன்றத்திற்கு சென்றனர்.


ஆரம்பமே அமர்க்களம் செய்த எதிர்க்கட்சிகள்: 


அங்கு அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியப்படி, இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் மோடி இன்று வழக்கத்தை விட நீண்ட உரை நிகழ்த்தினார். தார்மீக மற்றும் அரசியல் தோல்விக்குப் பிறகும், ஆணவம் அப்படியே தொடர்வது தெளிவாகிறது. பல முக்கியமான விஷயங்களில் மோடி ஏதாவது பேசுவார் என்று தேசமே எதிர்பார்த்தது.


நீட் மற்றும் பிற பணி நியமன தேர்வுகளில் வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்களிடம் அவர் கொஞ்சம் அனுதாபம் காட்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரது அரசாங்கத்தின் மிகப்பெரிய மோசடி, ஊழலுக்கு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து மற்றும் ரயில்வேதுறையின் தவறான நிர்வாகம் குறித்து மோடி மெளனம் காத்தார்.


மணிப்பூர் விவகாரம்:


கடந்த 13 மாதங்களாக வன்முறையின் பிடியில் மணிப்பூர் உள்ளது. ஆனால், அந்த மாநிலத்திற்கு செல்ல மோடி முனைப்பு காட்டவில்லை. அங்கு நடந்து வரும் புதிய வன்முறை சம்பவங்கள் குறித்து தனது உரையில் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை.


அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, விலைவாசி உயர்வு, வரலாற்றில் இதுவரை நடைபெறாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு, கருத்துக்கணிப்பு - பங்குச் சந்தை ஊழல் என அனைத்திலும் மோடி அமைதி காத்து வருகிறார். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் மோடி அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் கூட பிரதமர் மோடி முற்றிலும் மவுனம் காக்கிறார்.


நரேந்திர மோடி நீங்கள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறீர்கள். 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். அது மக்களால் முடிவுக்கு வந்துள்ளது. மோடிக்கு எதிராக மக்கள் தங்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இருந்த போதிலும், அவர் பிரதமராகி விட்டதால் அவர் பணியாற்ற வேண்டும்.


"மக்களுக்கு உபயோகமான விஷயங்களே தேவை, கோஷங்கள் அல்ல" என பிரதமர் சொல்கிறார். இதை நீங்களே நினைவில் கொள்ளுங்கள். எதிர்க்கட்சிகளும் இந்திய மக்கள் கூட்டணியும் நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை விரும்புகின்றனர்.


 






நாங்கள் மக்களவையில், தெருக்களில் மற்றும் அனைவருக்கும் முன்பாக குரல் எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்! வாழ்க இந்திய ஜனநாயகம்" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.