என்னை கன்னத்தில் அறைந்துவிட்டார்கள் சார் என்று கலவரக் களத்திலிருந்து எஸ்.பி அந்தஸ்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் தனக்கும் மேலிருக்கும் அதிகாரிக்கு ஃபோனில் புலம்பும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 


உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அச்சாரமாகப் பார்க்கும் அம்மாநிலக் கட்சிகள் பரபரப்பாக களத்தில் செயல்பட்டன.


நகர்ப்புறத்தில்தான் பாஜகவுக்கு ஆதரவு என்றிருந்த நிலையை மாற்றியிருக்கிறது உ.பி. பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள். இத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் உருவானது. ஹத்ராஸ் எனும் பகுதியில் சமாஜ்வாடி தலைவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மாநிலம் முழுவதும் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் மூண்டுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் காவல் உயர் அதிகாரி கள நிலவரம் குறித்து விவரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






அந்த வீடியோவில் பேசும் பிரசாந்த் குமார் எனும் காவல் கண்காணிப்பாளர், "சார், இங்கு நிலைமை மோசமாகவுள்ளது. இவர்கள் செங்கற்களை வீசி தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.  என்னையும் கூட சில வன்முறையாளர்கள் அறைந்துவிட்டனர். அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்கள் உள்ளது. பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் தூண்டுதலின் பெயரிலேயே மாவட்டத் தலைவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தனது உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கிறார். 


இந்த வீடியோவை அரசியலுக்காக கையில் எடுத்துள்ளன உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சியினர். எதிர்கட்சிகள் தரப்பில், "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 349 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளது" என்று குற்றஞ்சாட்டி வருகின்றன. காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் இது குறித்து
மூத்த போலீஸ் அதிகாரி எட்டாவா பிரஜேஷ் குமார் சிங் விளக்கமளித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், "வன்முறைக் கும்பல் வாக்குச்சாவடிக்கு அருகில் வருவதைத் தடுக்கும்போது தான் இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் எங்களிடம் உள்ளன. இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.