உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன்காரணமாக இந்த மாநிலங்கள் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவும் கணிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மருமகளான அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளார். இன்று டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா முன்னிலையில் அபர்ணா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். 


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபர்ணா, “எனக்கு பாரத பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் மிகவும் பிடிக்கும். எனக்கு எப்போதும் நாட்டின் நலன் தான் முக்கியம். பாஜகவிற்கு நான் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 






உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மகனான பிரதீக் யாதவின் மனையின் அபர்ணா யாதவ். இவருடைய தந்தை ஒரு பத்திரிகையாளர். தற்போது அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தகவல் ஆணைய கமிஷனராக உள்ளார். அபர்ணாவிற்கும் பிரதீக் யாதவிற்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் லக்னோ காண்ட் பகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ரீத்தாவிடம் இவர் தோல்வி அடைந்தார். 


சமீபத்தில் அவர் பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளித்து வந்தார். குறிப்பாக தேசிய குடிமக்கள் பதிவேடு, அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கம் ஆகியவற்றிக்கு இவர் ஆதரவளித்தார். அதேபோல் அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும் இவர் 11 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதன்காரணமாக அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவர் இணைந்துள்ளார். 


மேலும் படிக்க: ஜனநாயக அரசியலுக்கு முன்னோடியானது சமய உணர்வு - பஞ்சாப் தலித் அரசியல் ஒரு பார்வை