உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றிக்கொன்ற அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.


மத்திய அரசு கொண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் விவசாயிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி ஏந்தி போராட்டங்களையெல்லாம் நடத்திவருகின்றனர். அப்படி தொடங்கிய ஒரு போராட்டத்தில் தான் அரசின் அடக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.





 உத்தரப்பிரதேசத்தில் கேரி மாவட்டத்தில்  பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌரியா கலந்துக்கொண்டார்.  மேலும் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் கலந்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தகவலையறிந்த விவசாயிகள் திகோனியா என்னும் ஊரில் அமைச்சர் மற்றும துணை முதல்வருக்கு எதிராகக் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது கூட்டத்திற்குள் மத்திய அமைச்சரின் பின்னால் வந்த அவரது மகன் கார் தாறுமாறாக புகுந்தது. இதனால் கார் மோதி சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.  இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் கோபத்தில் விபத்து ஏற்படுத்தி காரை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தியதில், கார் முழுவதும் எரிந்து நாசமானது.


இதற்கிடையில் தான், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் நிகழ்ச்சி நடைபெறவிருந்து பானிபூர்பூருக்கு உ.பி துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா வந்தார். அப்போது கோபத்தில் இருந்த விவசாயிகள் துணைமுதல்வரின் காரை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்திய போது, அவ்வழியாக வந்த கார்களை மறித்துத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய தாக்குதலின் காரணமாகவும் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் தெரிவிக்கையில், அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் ஏறி இறங்கியதில் விவசாயிகள் இருவர் உயிரிழந்தனர். ஆனால் கடைசியாக கிடைத்த தகவலின்படி, விவசாயிகள் போராட்டத்தின் போது வெடித்த வன்முறையால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் இறந்ததாகவும், மற்ற நான்கு பேர் விவசாயிகள் என கூறப்படுகிறது. ஆனால் உ.பியில் அரசு இதுவரை 6 பேர் பலியானதாகக்கூறியுள்ளது.





இந்நிலையில் தான், போராட்டத்தின் போது விவசாயிகள் கொல்லப்பட்டச் சம்பவத்தைக்கண்டிக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. இதோடு இச்சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.