கோவிட்-19 தொற்று உச்சத்தில் இருந்தபோது, வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார் . அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.
தனது ட்விட்டர் கணக்கில், ராஜீவ் சந்திரசேகர், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நிருபர்களால் ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த கேள்விகளைத் தவிர்க்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த அமைச்சர், "அனைத்து இந்தியர்களுக்கும் நினைவூட்டுகிறேன், ஃபைசர் இந்திய அரசை மிரட்ட முயன்றது... மேலும் காங்கிரஸின் ராகுல் காந்தி, சிதம்பரம் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கொரோனா உச்சத்தில் இருந்த போது வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர் என குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 2021 இல், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், காங்கிரஸின் ராகுல் காந்தி பிரதமருக்கு கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் இந்திய தடுப்பூசிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மே 2021 இல், கொரோனா 2வது அலையின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், மத்திய அரசாங்கத்திடம் 5 கோடி ஃபைசர் தடுப்பூசி டோஸ்களை வழங்கத் தயாராக இருப்பதாக கூறியது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் தட்டுப்பாடுகள் ஏற்பட்ட போது, மத்திய அரசாங்கம் மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்தது. தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடு இல்லை என்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்படி 2.2 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராஜீவ் சந்திரசேகரின் கூற்றுகளை மறுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.